சென்னை: சூர்யா நடிப்பில் ஓடிடியில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற சூரரைப் போற்று திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஓடிடி நேரடியாக நவ. 12ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது. சூர்யா நடித்திருந்த சூரரைப் போற்று. படம் நேரடி ஓடிடி வெளியீட்டுக்கு திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருந்தபோதிலும் சூரரைப் போற்று படத்தை ரசிகர்கள் பார்த்து ரசித்ததுடன், விமர்சன ரீதியாகவும் பாராட்டைப் பெற்றது. அத்துடம் படம் திரையரங்கில் வெளியிட்டால் மீண்டும் பார்க்கலாம் என்று ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். மேலும், இதுபோன்ற படத்தை திரையரங்கில் பார்க்காமல் விட்டோமே என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர்.
இதையடுத்து இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படமாக அமைந்த சூரரைப் போற்று படத்தை தற்போது திரையரங்குகளில் வெளியிட பேச்சு வார்த்து நடைபெற்று வருவதாக கோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரோனா அச்சுறுத்தலுக்கு பிறகு தற்போது திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டு அரசு வகுத்த நெறிமுறைகளின்படி செயல்பட்டு வருகிறது. திரையரங்குகளில் தனிப்பட்ட இடைவெளியுடன் ரசிகர்கள் படங்களை பார்த்து செல்கின்றனர்.