65 பாடகர்கள் குரலில் ’தமிழா தமிழா’ - கலைஞர்களுக்கு நிதி திரட்டும் 'டுகெதர் அஸ் ஒன்' - பாடகர் சீனிவாசன்
சென்னை: கரோனா நோய்த் தொற்று நெருக்கடி காலத்தில் வாழ்வாதாரத்திற்காக கஷ்டப்படும் பாடகர்கள், இசை கலைஞர்களுக்கு உதவும் வகையில் 65 பாடகர்கள் இணைந்து ’தமிழா தமிழா’ பாடலை பாடியுள்ளனர்.
யுனைடெட் சிங்கர்ஸ் சாரிடபிள் ட்ரஸ்ட் (USCT) பிரபல பின்னணி பாடகர் ஸ்ரீனிவாசால் உருவாக்கப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகும். இதில் இவருடன் இணைந்து பாடகர்கள் உன்னிகிருஷ்ணன், சுஜாதா மோகன், ராகுல் நம்பியார், ரஞ்சித் கோவிந்த் ஆகியோர் பொறுப்பு வகிக்கின்றனர்.
இந்த நோய்த் தொற்று நெருக்கடி காலத்தில் வாழ்வாதாரத்திற்காக கஷ்டப்படும் பாடகர்கள், இசை கலைஞர்களுக்கு நிதி திரட்டி உதவுவதே இந்த அமைப்பின் நோக்கம். 28 ஆண்டுகளுக்கு முன்பு ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளிவந்த சூப்பர் ஹிட் பாடலான "தமிழா தமிழா" பாடலை ஒரு புதிய முயற்சியாக 65 பாடகர்கள் இணைந்து பாடி உள்ளனர்.
இதுகுறித்து யுனைடெட் சிங்கர்ஸ் சாரிடபிள் ட்ரஸ்ட் அமைப்பினர் கூறுகையில், "ஏ.ஆர்.ரகுமான், மோகன்லால், யஷ் ஆகியோர் சுதந்திர தினத்தன்று பாடலை வெளியிடுகின்றனர். இதைத்தொடர்ந்து அமைப்பின் நோக்கத்திற்காக மக்களிடையே நிதியுதவி கிடைக்கும் என்று நம்புகிறோம்.
இந்த பாடலை ஊரடங்கு சமயத்தில் 65 பாடகர்கள் ஒருங்கிணைந்து வீட்டில் இருந்தபடியே தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் பாடி பதிவு செய்துள்ளனர்.
'டுகெதர் அஸ் ஒன்' பாடல் ஸ்ரீனிவாசுடன் இணைந்து ராகுல் நம்பியார் மற்றும் ஆலாப் ராஜுவால் வடிவமைக்கப்பட்டு, வீடியோ லிட் பாக்ஸ் மீடியா ஃபேக்டரியால் தொகுக்கப்பட்டுள்ளது. Ishit Kuberkar இந்த பாடலை mixing and Mastering செய்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து USCT செப்டம்பர் மாதத்தில் உலக அளவில் நிதி திரட்டுவதற்காக ஆன்லைனில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது" என்று கூறினர்.