தமிழ் சினிமாவில் மங்காத்தா, ஜில்லா, காளை, வல்லவன் உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த மகத், பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பால் மகத்துக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் மகத் தற்போது நடிகை யாஷிகாவுடன் இணைந்து 'இவன் தான் உத்தமன்' படத்தில் நடித்துள்ளார். ரொமான்டிக், த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தை மஹிராம், வெங்கட் ஆகியோர் இயக்கியுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் 'இவன் தான் உத்தமன்' படத்தில் நடிகர் சிம்பு பாடியுள்ள பாடல் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அறிவித்தது போல் 'டேய் மாமே' என்று பெயரிடப்பட்டுள்ள பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிம்பு கடைசியாக கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான, 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்தில் இரண்டு பாடல்களை பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்கு பிறகு, சிம்பு குரலில் பாடல் கேட்க வெறித்தனமாக உள்ளது என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: திகில் கிளப்பும் பூட் பட ட்ரெய்லர்!