ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யும் சூர்யா - கார்த்தி ரசிகர்களுக்கு பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு ட்விட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக ஏழை, எளிய மக்கள் வேலையின்றி, உணவின்றி தவித்து வருகின்றனர். இருப்பினும், இது போன்ற மக்களுக்கு சமூக ஆர்வலர்களும் தொண்டு நிறுவனங்களும் உணவு, அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இந்த உதவிகளை ரஜினி, விஜய், அஜித், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பல நடிகர்களின் ரசிகர்களும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இதனையடுத்து கடந்த சில நாட்களாக சூர்யா, கார்த்தி ரசிகர்கள் இணைந்து ஏழை, எளிய மக்களுக்கு உணவளித்து வருகின்றனர். இவர்களின் இந்த சேவையைப் பாராட்டும் விதமாக தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், "சூர்யா, கார்த்தி ரசிகர்கள் கடந்த சில நாட்களாக ஓய்வின்றி, மாநிலம் முழுவதும் ஏழை மக்களுக்கு உணவு, மாஸ்க்குகள் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுடைய சேவைக்குப் பாராட்டுகள். ஆனால், அதே நேரத்தில் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். பொதுமக்களுக்கு உதவி செய்யும் போது, மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பான உபகரணங்களை அணிந்து கொள்ளுங்கள். அதே போல், சமூக விலகலையும் கட்டாயம் கடைபிடியுங்கள்" என்று ட்வீட் செய்துள்ளார்.