தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று பின் அங்கேயே தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவக்குமார் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் நடித்துள்ளார்.
பின் சில காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தவர், 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். பின் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'மாம்'. இப்படி 300 படங்களுக்கும் மேல் நடித்த ஸ்ரீதேவி சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். இவரின் மறைவு இந்திய திரையுலகிற்கு மிகப் பெரிய இழப்பாக அமைந்தது.
சமீபத்தில் இவரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்போது சிங்கப்பூரில் உள்ள 'மேடம் டுஸ்ஸாட்ஸ்' அருங்காட்சியகத்தில் இவரது நினைவாக மெழுகு சிலை அமைக்கப்படும் என்று அருங்காட்சியக நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்டது.
ஐந்து மாதங்களாக வடிவமைக்கப்பட்ட அந்த சிலை நாளை (செப்.4) திறக்கப்படவுள்ளது. இதில் ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இதுகுறித்து போனி கபூர் நெகிழ்ச்சியடைந்துள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஸ்ரீதேவி எங்களது இதயத்தில் மட்டும் வாழவில்லை. பல லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயத்திலும் வாழ்ந்து வருகிறார். மேடம் டுஸ்ஸாட்ஸில்அவரது சிலையை காண்பதற்கு மிகவும் ஆவலுடன் இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.