'அதைத் தாண்டி வேறு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை' - எஸ். ஆர். பிரபு - தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனை
சென்னை: தயாரிப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து எஸ். ஆர். பிரபு பொது வெளியில் கூறியுள்ளார்.
கரோனா ஊரடங்கு உத்தரவால் திரையரங்குகள் அனைத்தும் மார்ச் மாதம் இறுதி வாரம் முதல் தற்போது வரை மூடப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது, கடந்த மூன்று மாதங்களாக எந்தப் புதிய திரைப்படங்களும் வெளியாகவில்லை. மேலும், அனைத்து வித படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இதனால் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவர்களின் இந்த நிலையைக் கருத்தில் கொண்டு விஜய் ஆண்டனி உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது சம்பளத்தைக் குறைத்துள்ளனர்.
சமீபத்தில் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே, தனது ட்விட்டர் பதிவில், பல்வேறு நடிகர்கள் தன்னிடம் சம்பளத்திலிருந்து 50 விழுக்காடு குறைக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகப் பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து இந்தப் பொருளாதார இழப்பை சரி செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட முன்னணி தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு கூட்டத்தில் பேசிய சிலவற்றை தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
அதில், 'கரோனாவுக்குப் பிந்தைய நிலை குறித்து, நான் உட்பட சில தயாரிப்பாளர்கள் கலந்து ஆலோசித்தோம். மேலும் பல்வேறு சங்கங்களுடன் ஆலோசித்து, சம்பளம் உள்ளிட்ட தயாரிப்பு செலவுகள் குறித்து ஒரு சுமுகத் தீர்வை எடுக்க முடிவு செய்துள்ளோம். அதைத் தாண்டி வேறு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை' என்று தெரிவித்துள்ளார்.