உலகளவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவில் ரசிகர்கள் பட்டாளத்தைத் மார்வெல் ஸ்டுடியோஸில் வெளியான ஸ்பைடர்மேன் திரைப்படம் தக்கவைத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் வெளியான ஸ்பைடர்மேன் ஃபேர் ஃப்ரம் ஹோம் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை புரிந்தது.
இந்நிலையில் ஸ்பைடர்மேன் உரிமையை வைத்துள்ள சோனி நிறுவனத்துக்கும், டிஸ்னியின் மார்வெல் ஸ்டுடியோஸுக்கும் இடையேயான ஒப்பந்தத்தில் பிரச்னைகள் எழுந்த காரணத்தினால், ஸ்பைடர்மேன் திரைப்படம் மார்வெல் சீரிஸிலிருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது.
இத்தகவலை அறிந்த மார்வெல் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து தங்கள் கருத்துகளை சமுக வலைதளங்களில் பகிர்த்து கொண்டிருந்தார்கள். மேலும் #SAVESPIDERMAN என்னும் ஹேஸ்டேகையும் உலகளவில் ட்விட்டரில் ட்ரெண்டு ஆக்கினர்.
இந்நிலையில் சோனி நிறுவனமும், டிஸ்னியும் இணைந்து போடப்பட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் சமரசம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கும் வகையில், ஸ்பைடர்மேன் திரைப்படத்தின் நடிகர் "டாம் ஹாலண்ட்" தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் "தி வுல்ஃப் ஆஃப் வோல் ஸ்ட்ரீட்” திரைப்படத்தில் இடம்பெற்ற 'நான் எங்கேயும் வெளியேறவில்லை’ என்னும் வசனத்தை பதிவிட்டுள்ளார்.
இது குறித்து மார்வெல் நிறுவனத்தின் தலைவர் கெவின் ஃபைஜ் கூறுகையில் "எம்.சி.யுவில் ஸ்பைடேயின் பயணம் தொடருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மார்வெல் ஸ்டுடியோவில் உள்ள அனைவரும் தொடர்ந்து பணியாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்" என்றார். இதைதொடர்ந்து சோனி தலைமை தகவல் அலுவலர் ராபர்ட் லாசன் கூறுகையில், "நாங்கள் இருவரும் சேர்ந்து முன்னேறுவதில் மகிழ்ச்சியடைகிறோம்," எனத் தெரிவித்தார்.
மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ் சீரிஸில் அடுத்தாக திரைக்கு வரும் ஸ்பைடர்மேன் திரைப்படம் 2021ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு ஸ்பைடர்மேன் ரசிகர்களைக் குதுகலத்தில் ஆழ்த்தியுள்ளது.