நகைச்சுவை, பேச்சு, நக்கல், நையாண்டி நிறைந்த எந்தப் பாடலாக இருந்தாலும் சரி, எஸ்.பி.பி.யை மிஞ்ச எவருமில்லை. அவர் பாடிய பாடல்களை சிலாகித்து பேசும் இளைஞர் பட்டாளம் அதிகமுண்டு. மறைந்த எஸ்.பி.பி.யின் உடலுக்குப் பொதுமக்கள், திரை பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
"இந்திய இசைக்கலைஞர், மூத்த பின்னணி பாடகர், இசையமைப்பாளர், படத்தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட எஸ்.பி.பி. மறைவு என்னை அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியது.
தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி என நான்கு மொழிகளில் பின்னணி பாடகராக ஆறு தேசிய விருதுகள், பல மாநில விருதுகளை பெற்றுள்ளார். அவருடைய இறப்பு, இந்திய மக்கள், குறிப்பாக உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்களுக்கு ஈடுசெய்ய முடியாததாகும். தன் மெல்லிசை குரலால் எஸ்.பி.பி. நம்முடனேயே இருப்பார்" எனத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
"தமிழ்நாட்டு மக்களைத் தேனினும் இனிமையான தனது குரலால் கவர்ந்தவர் எஸ்.பி.பி.. அவர் இறந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரது மறைவு தமிழ் திரைப்படத் துறைக்கும், இசை ரசிகர்களுக்கும் மிகப்பெரிய இழப்பாகும். இவருடைய இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. அவர் மறைந்தாலும், அவரது பாடல்கள் என்றும் நம் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், ரசிக பெருமக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்
"தனது அற்புத குரல் வளத்தால் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரையும் ஈர்த்து இந்திய அளவில் எண்ணிலடங்கா இசை ரசிகர்களின் மனதைக் கொள்ளைகொண்டவர் எஸ்.பி.பி.. அன்னாரது மறைவு நமக்கெல்லாம் சொல்லொணாத் துயரத்தை அளித்திருக்கிறது. அவர் மறைந்தாலும், கானக்குரல் கொண்டு அவர் பாடிய பாடல்கள் என்றுமே மறையாது ஒலித்துக்கொண்டே இருக்கும்.
அவரது பெருமையை நமக்கு நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும். தனக்கென சீரும் சிறப்பும் பேரும் புகழும் கொண்டு திரையிசை உலகில் ஒரு தனி இடம் கொண்டிருந்த எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்" எனத் தெரிவித்துள்ளார்.