தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

எஸ்.பி.பி., பிறந்த நாள்: மண்ணில் இவரின் பாடலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ! - எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

சினிமா ரசிகர்களை தன் வசீகரக் குரல்களால் ஈர்த்த பாடகர்கள் பலர் இருந்தாலும், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அதில் தனித்துவமானவர். மண்ணை விட்டு மறைந்த மாபெரும் கலைஞனின் 76ஆவது பிறந்தநாள் இன்று.

HBD SPB
HBD SPB

By

Published : Jun 4, 2021, 2:03 AM IST

Updated : Jun 4, 2021, 12:02 PM IST

கடந்த 1946, ஜூன் 4ஆம் தேதி ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூரில் பிறந்தார் எஸ்.பி. பாலசுப்ரமணியம். கடந்த 1969ஆம் ஆண்டு வெளியான ‘சாந்தி நிலையம்’ படத்தில் இடம்பெற்ற ‘இயற்கை எனும்’ பாடல் எஸ்பிபியின் குரலில் பதிவு செய்யப்பட்ட முதல் தமிழ்ப் பாடல் என்று கூறப்படுகிறது. அந்த பாடல் வெளியாவதற்கு முன்பாகவே அவர் பாடிய ‘அடிமைப் பெண்’ திரைப்படம் வெளியானது. இதில் அவர் பாடிய ‘ஆயிரம் நிலவே வா’ பாடல் மிகவும் பிரபலம்.

‘ஹோட்டல் ரம்பா’ என்ற படத்துக்கு எம்.எஸ்.வி இசையில், ‘அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு’ என்ற பாடல் தான் எஸ்பிபியால் முதன்முதலாக பாடப்பட்டது எனவும் கூறப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக இந்தப் படம் வெளியாகவில்லை.

விருதுகளின் நாயகன்:

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, சிறந்த பாடகருக்கான தேசிய விருதை எஸ்பிபி ஆறு முறை வென்றுள்ளார். கடந்த 1979ஆம் ஆண்டு வெளியான ’சங்கராபரணம்’ திரைப்படத்தில் ‘ஓங்கார நாதானு’ என்ற பாடலுக்காக முதல் தேசிய விருதை பெற்றார். அதன்பிறகு ‘ஏக் துஜே கே லியே’ படத்தில் இடம்பெற்ற ‘தேரே மேரே பீச் மெய்ன்’, ’சாகர சங்கமம்’ படத்தின் ‘வேதம் அனுவனுவுனா’, ’ருத்ர வீணா’ படத்தில் ‘செப்பலானி உன்டி’, 'சங்கீத சாகர கானயோகி பஞ்சாக்‌ஷர காவய்’ படத்தில் இடம்பெற்ற ‘உமந்து குமந்து கானா’, ‘மின்சார கனவு’ படத்தின் ‘தங்க தாமரை’ ஆகிய பாடல்கள் முறையே தேசிய விருதை வென்றுள்ளார். கடந்த 2001ஆம் ஆண்டு, அவருக்கு பத்ம ஸ்ரீ விருதும், கடந்த 2011ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டன.

எஸ்பிபியின் பன்முகத்தன்மை:

தமிழர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த எஸ்.பி.பி., தெலுங்கு தேச மக்களால் பெரிதும் கொண்டாடப்படுபவர். அவர் தேசிய விருது பெற்ற ஆறு படங்களில், மூன்று தெலுங்கு படங்கள். பலராலும் சிறந்த பாடகர் என அறியப்படும் எஸ்.பி.பி., இசையமைப்பாளர், தயாரிப்பாளர், டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முகத்தன்மை கொண்டவர். பகேதி சிவராம் இயக்கத்தில் உருவான தெலுங்கு ஆவணப்படத்துக்கு அவர் முதன்முதலாக இசையமைத்தார்.

அதேபோல், தமிழில் சிகரம், உன்னைச் சரணடைந்தேன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தெலுங்கில் உஷாகிரண் மூவிஸ் தயாரித்த ‘மயூரி’ திரைப்படத்தில் அவர் இசையமைப்பில் உருவான ‘ஈ படம் இலாலோனா நாட்ய வேதம்’ எனும் பாடல் இன்றும் தெலுங்கு மக்களின் மனதுக்கு நெருக்கமான பாடலாகும். இந்தப் படத்தை தமிழில் தயாரித்தார் எஸ்பிபி. அதன்பிறகு சுபசங்கல்பம், பாமனே சத்தியபாமனே உள்ளிட்ட படங்களை தயாரித்தார்.

டப்பிங் பணி:

மிமிக்ரி செய்வதில் சிறந்தவரான எஸ்பிபி, டப்பிங் துறையில் சிறந்து விளங்கினார். டோலிவுட்டில் கமல்ஹாசன் பிரபலமடைய எஸ்.பி.பி., மிக முக்கியமான காரணம் எனலாம். ‘தசாவதாரம்’ படத்தின் தெலுங்கு டப்பிங்கில் கமல்ஹாசனின் ஏழு கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்தவர் எஸ்.பி.பி., அட்டர் பர்க்கின் ‘காந்தி’ திரைப்படத்தின் தெலுங்கு வெர்சனில் காந்தி கதாபாத்திரத்துக்கு குரல் கொடுத்து டப்பிங்கில் தன் தனித்துவத்தை நிரூபித்தார்.

எஸ்பிபி காம்போ:

எஸ்.பி.பி., - இளையராஜா காம்போவில் உருவான பல பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட். எஸ்.பி.பி., சிறந்த பாடகருக்காக பெற்ற ஆறு தேசிய விருதுகளில் இரண்டு படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். எஸ்.பி.பி., போன்ற பாடகர் கிடைத்ததால், இளையராஜா பாடல்களில் பல புதிய முயற்சிகளை செய்து பார்த்தார். மாமன் ஒருநாள் (ரோசாப்பூ ரவிக்கைக்காரி), என் ஜோடி மஞ்சக் குருவி (விக்ரம்), ஆடி மாசம் காத்தடிக்க (பாயும் புலி), ராத்திரி நேரத்தில் (அஞ்சலி) உள்ளிட்ட பல பாடல்களில் எஸ்.பி.பி., வித்தியாசமாக குரலை மாற்றி பாடியிருக்கிறார்.

எஸ்.பி.பி., பாடாமல் தவிர்த்த பாடல்கள் ஆயிரம். அதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு ‘I know what i don't know' என்று சொல்லியிருப்பார். தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார். ஒரே நாளில் 20க்கும் அதிகமான பாடல்களை பாடிய பெருமை எஸ்.பி.பி.,க்கு உண்டு.

எம்ஜிஆர், சிவாஜி காலகட்டத்திலேயே பாட வந்திருந்தாலும், ரஜினி, கமல் ஆகிய இருவருக்கும் எஸ்.பி.பி., எக்கச்சக்கமான பாடல்களை பாடியுள்ளார். லட்சுமிகாந்த் - பியாரிலால், பர்மன், இளையராஜா, ரஹ்மான் என இந்திய சினிமாவின் முக்கிய இசையமைப்பாளர்கள் பலருடனும் பணிபுரிந்த பெருமை இவரையே சேரும். இன்றைய தலைமுறையான அனிருத் வரை இணைந்து பணியாற்றிவிட்டார்.

ரஜினியின் மாஸ் சாங் அல்லது ஓப்பனிங் சாங் பெரும்பாலும் எஸ்.பி.பி.,யின் குரலில் உருவானவையே. பட்டுக்கோட்டை அம்மாலு (ரங்கா), ராஜாவுக்கு ராஜா நான்டா (படிக்காதவன்), வெற்றி நிச்சயம் (அண்ணாமலை), ராக்கம்மா கையத்தட்டு (தளபதி), நான் ஆட்டோகாரன் ( பாட்ஷா) உள்ளிட்ட பல பாடல்களை இதற்கு உதாரணமாக சொல்ல முடியும்.

‘நான் ஆட்டோகாரன்’ பாடல் தமிழ்நாட்டு ஆட்டோ ஓட்டுநர்களின் கீதமாகத் திகழ எஸ்பிபியின் குரலும் முக்கிய காரணமாகும். அவரது குரலில் உருவான பாடல்களை முனுமுனுக்காதவர்கள் தமிழ்நாட்டில் குறைவு எனலாம். தற்போது அவர் மறைந்திருந்தாலும் அவரின் குரல் எங்கும், எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

Last Updated : Jun 4, 2021, 12:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details