சென்னை:மூன்றாண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் நடிகர் சங்கத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை (மார்ச் 20) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள குட்-ஷெப்பேர்ட் பள்ளியில் தொடங்கியது.
முதலில் தபால் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. தலைவர், 2 துணைத் தலைவர்கள், பொருளாளர் மற்றும் பொதுச் செயலாளர் என ஐந்து முக்கிய பதவிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
பாண்டவர் அணி முன்னிலை
இந்நிலையில், துணை தலைவர் பதவிக்கு விஷால் அணி சார்பில் போட்டியிட்ட பூச்சி முருகன் முன்னிலை வகித்து வந்த நிலையில், மொத்த வாக்குச்சீட்டுகளை விட 5 சீட்டுகள் அதிகமாக இருப்பதாக, எதிரணியை சேர்ந்த ஜசரி கே. கணேஷ் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து தற்போது, வாக்கு எண்ணும் பணி நிறுத்திவைக்கப்பட்டது. சிறிது நேரத்திற்கு பின்னர், வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிட்டது.
பாண்டவர் அணி சார்பாக தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசர், துணை தலைவர் பதவிகளுக்கு போட்டியிடும் பூச்சி முருகன், கருணாஸ், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் தற்போதைய நிலவரப்படி முன்னிலையில் உள்ளனர்.
சங்கரதாஸ் அணி வெளிநடப்பு
வாக்கு எண்ணும் மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஐசரி கணேஷ், "மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்த தீர்ப்பு வந்துள்ளது. நடிகர் சங்க தேர்தல் கட்டடம் கட்ட தாமதானது காரணம், மேல் முறையீடு செய்ததால்தான். பாண்டவர் அணி நீதிமன்ற தீர்ப்பை மேல் முறையீடு செய்தது காரணமாகதான் இந்த தாமதம்.
தற்போது 10 பெட்டிகள் திறக்கப்பட்டது. ஒரு பெட்டி மட்டும் திறக்க தாமதமானது. அதாவது தபால் வாக்குகளுடன் மொத்தம் பதிவான வாக்குகள் 1,916. நேரடியாக பதிவான வாக்குகள் 1,602. ஆனால், ஆனால் தலைவர் பதவிக்கு 1609 வாக்குகளும், பொது செயலாளர் பதவிக்கு 1605 வாக்குகளும், துணை தலைவர் பதவிக்கு 1608 வாக்குகளும், பொருளாளர் பதவிக்கு 1609 வாக்குகளும் பதிவாகியுள்ளன. பதிவான வாக்குகளை விட இந்த எண்ணிக்கை எப்படி அதிகமானது என தெரியவில்லை.
அதே போல மொத்த தபால் வாக்குகள் 1,042 உள்ள நிலையில், 1,180 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது. கூடுதலாக, பதிவான 138 எப்படி வந்தது எனத் தெரியவில்லை. இதுகுறித்து தேர்தல் அலுவலரிடம் கேட்டால் எந்த பதிலும் கிடைக்கவில்லை. அதனால் அதிருப்தியில் எங்கள் அணி வாக்கு எண்ணிக்கையில் இருந்து வெளியேறுகிறது" எனத் தெரிவித்தார்.