பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் 2018ஆம் ஆண்டு புற்று நோயுடன் போராடி வந்தார். புற்றுநோய் சிகிச்சைக்காக நியூயார்க் சென்ற அவர், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா திரும்பினார்.
இந்தியா திரும்பிய போதும் அவ்வப்போது உடல் நிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய வண்ணமுமாக இருந்தார்.
இதனையடுத்து நேற்று (ஏப்.29) காலை ரிஷி கபூரின் உடல்நிலை மோசமானதால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று (ஏப்.30) காலை சிகிச்சைப் பலனின்றி ரிஷி கபூர் உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பிரபலங்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "நடிகர் ரிஷி கபூரின் மறைவு செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. எப்போதும் புன்னகையுடன் காணப்படும் எனது நண்பரை இழந்துள்ளேன். எங்களுக்குள் பரஸ்பர அன்பும் மரியாதையும் இருந்தது" என்று ட்வீட் செய்துள்ளார்.
தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில், "ரிஷி ஜி மறைவு எனக்கு மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஒரு சிறந்த நண்பர், சிறந்த கலைஞர், மில்லியன் கணக்கான நபர்களின் இதயத்துடிப்பு. இந்த தலைமுறையினரின் சிறந்த நினைவு. இவரின் மறைவு என் இதயத்தை நொறுக்கியுள்ளது. விடை கொடுக்கிறேன் நண்பா" என்று ட்வீட் செய்துள்ளார்.
தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு தனது ட்விட்டர் பக்கத்தில், "ரிஷி கபூரின் மரணம் குறித்த செய்தி என் மனதை உடைத்து விட்டது. சினிமா உலகில் ஈடு செய்ய முடியாத மற்றொரு இழப்பு. ரிஷி கபூர் முழுமையான பொழுதுபோக்கு நிறைந்த திறமையான நடிகர். ரன்பீர் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். ரிஷி கபூரின் ஆன்மா சாந்தியடையட்டும்" என்று ட்வீட் செய்துள்ளார்.
நடிகை காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில், "2020ஆம் ஆண்டு இதை விட மோசமான ஆண்டாக அமையாது. பெரிய லெஜண்டை இழந்துவிட்டோம். ரிஷி கபூர் சார் நீங்கள் சொர்க்கத்தை பிரகாசிக்கும் ஒளி நட்சத்திரமாக இருப்பீர்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். இந்த நேரத்தில் உங்கள் குடும்பத்தில் என்ன நடக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியமால் இருப்பது, என்னை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது" என்று ட்வீட் செய்துள்ளார்.
நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், "ரிஷி கபூர் தனது மனதில் பட்டதை எந்த இடம் என்றும் பாராமல் நேரடியாக பேசும் நபர். தனது நிபந்தனைகளுக்கு ஏற்ப, தனது வாழ்க்கையை வாழ்ந்த நபர்" என்று ட்வீட் செய்துள்ளார்.
நடிகர் அல்லு அர்ஜூன் தனது ட்விட்டர் பக்கத்தில், "அனைவரையும் தன் பக்கம் கவர்ந்திழுக்கும் திறன் கொண்ட ரிஷி கபூர்ஜியின் மறைவு மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பன்முகத் திறன் வாய்ந்த அவரை நான் எப்போதும் போற்றியுள்ளேன். குடும்பங்களை மகிழ்வித்த ஒரு பெரிய நடிகர். அவரது குடும்பத்திற்கு என் இரங்கல்" என ட்வீட் செய்துள்ளார்.
நடிகர் ராம்சரண் தனது ட்விட்டர் பக்கத்தில், 'நம்மிடையே ரிஷி கபூர்ஜி இல்லை என்பதை நினைக்கையில் மனம் மிகவும் வருந்துகிறது. இந்திய சினிமாவின் மற்றொரு லெஜண்ட் இன்று நம்மை விட்டுச் சென்றுள்ளார். கபூரின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல்" என ட்வீட் செய்துள்ளார்.
நடிகை தமன்னா தனது ட்விட்டர் பக்கத்தில், "என்னால் நம்ப முடியவில்லை. ரிஷி கபூர் மரணமடைந்து விட்டார் என்ற செய்தியுடன் நான் இன்று எழுந்துள்ளேன். கபூர் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல். ரிஷிஜி உங்களை நாங்கள் மிஸ் செய்கிறோம்" என்று ட்வீட் செய்தார்.
நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நேற்று மிகவும் திறமையான இர்ஃபான் கானை இழந்தோம். இன்று புகழ்பெற்ற ரிஷி கபூரை இழந்துள்ளோம். இது இந்திய சினிமாவுக்கு ஏற்பட்ட பேரிழப்பு. என் இதயம் நொறுங்கிவிட்டது" என ட்வீட் செய்தார்.