தென்னிந்திய மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்கும் பூஜா, இலங்கையைப் பூர்விகமாகக் கொண்டவர். இவர் சந்தியா - உமாஷங்கர் தம்பதியருக்கு ஜூன் 25, 1981ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தாயார் இலங்கையையும், தந்தை இந்தியாவின் கர்நாடக மாநிலத்தையும் பூர்விகமாகக் கொண்டவர்கள். இலங்கையில் தொடக்கப்பள்ளியை முடித்த பின்னர், இந்தியாவிலேயே தனது எம்பிஏ படிப்பு வரை கற்றுத் தேர்ந்தார்.
முதன் முதலாக பூஜாவின் நண்பர் ஒருவரே, அவரை இயக்குநர் ஜீவாவுக்கு அறிமுகப்படுத்தினார். அவரது இயக்கத்தில் வெளியான ’உள்ளம் கேட்குமே’ திரைப்படத்தில், ஆங்கிலோ - இந்தியன் கதாபாத்திரத்தில் நடித்து திரைத்துறைக்குள் காலடி எடுத்துவைத்தார்.
அந்தத் திரைப்படத்தின் மூலம் கிடைத்த வருவாயை தனது படிப்பு, இதர தேவைக்குப் பயன்படுத்திக்கொள்வது மட்டுமே அப்போது அவரது எண்ணமாக இருந்தது. மீண்டும் நடிக்கக் கூடாது என்றும் எண்ணிக் கொண்டிருந்தார். பின்னர் தவிர்க்க முடியாத காரணத்தால் சரண் இயக்கத்தில், நடிகர் மாதவனின் ஜோடியாக 'ஜேஜே' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
’உள்ளம் கேட்குமே’ திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே, அவரது இரண்டாவது படமான ’ஜேஜே’ திரைப்படம் வெளியாகி, உற்சாகம் தரக்கூடிய வகையில் நல்ல விமர்சனங்களைப் பெற்றார். அதன் பின்னர் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ’அட்டகாசம்’ திரைப்படத்தில், கதாநாயகியாக நடித்தார்.
அதன் பின்னர் தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் குவிய நடிப்பில் படு பிசியானார் பூஜா. தமிழ் இளைஞர்களின் கனவுக் கன்னியாக, காதல் கதாபாத்திரங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்துவந்த பூஜா, இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான ‘நான் கடவுள்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.