புரோட்டாவுடன் இருந்த அக்கறை சூரிக்கு பிரியாணியோடு இல்லாமல் போக, மனைவியிடம் அடிவாங்காமால் தப்பிக்க ஒடும் ஒட்டம் நெட்டிசன்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா தொற்று காரணமாக இந்திய அரசு தற்போது தேசிய ஊரடங்கு உத்தரவை அமல் படுத்தியுள்ளது. இதனால் அனைத்துவித படப்பிடிப்புகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து வீட்டில் இருக்கும் பிரபலங்கள் தங்கள் வீட்டில் செய்யும் வேலைகள், குடும்பத்தினருடன் செலவழிக்கும் நேரம் என அனைத்தையும் வீடியோவாகவும் புகைப்படமாகவும் தங்களது சமூகவலைதளப்பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர்.
இதனிடையே தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான சூரி கறி பிரியாணி சமைக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், சூரி தனது வீட்டு கிச்சனில் சமைத்துக்கொண்டிருக்க அவரது குழந்தைகள் விளையாட்டு சாமானில் சமைத்துக்கொண்டிருக்கின்றனர். அப்போது சூரியின் மனைவி கிச்சனில் நுழைந்து சூரி சமைக்கும் பிரியாணியை ருசி பார்க்கிறார். லைட்டாக சாப்பிட்டு விட்டு தூவென துப்புகிறார். சூரி என்னாச்சு என கேட்க உப்பு எனக்கூறுகிறார். வாயில உப்பு எதுக்கு எடுத்து போட்ட. கறிய சாப்பிட வேண்டியதுதானே எனக் கூறிக்கொண்டே சூரியும் பிரியாணியை ருசி பார்க்கிறார். அப்போது அவருக்கும் உப்புகரிக்கிறது.
உடனே சூரி தனது குழந்தைகளிடம் அய்யய்யோ குழந்தைதளா பிரியாணி சொதப்பிருச்சு வாங்க ஓடிறலாம் என கிச்சனை விட்டு ஒட்டம் பிடிக்கிறார். நகைச்சுவையாக எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் நெட்டிசன்களால் அதிகம் விரும்பப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.