பிரபல நடிகர் ஆயுஷ்மான் குரானா 'ஷுப் மங்கள் ஜ்யாதா சாவ்தன்’ எனும் ஹிந்தித் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
தன் பாலின ஈர்ப்பாளர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுவரும் இந்தத் திரைப்படம் குறித்து பேசிய அவர், சட்டப்பிரிவு 377 நீக்கப்பட்டது தன்னை ஒரு இந்தியனாக பெருமிதம் கொள்ளவைத்தது என்றும், இந்தியர்களின் தனித்துவத்தைக் கொண்டாட முயற்சிக்கும் திரைப்படமாக இந்த ஷுப் மங்கள் ஜ்யாதா சாவ்தன் அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ”மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியாகத் தான் பிறக்கின்றனர், எனவே அனைத்து மனிதர்களும் ஒரே மாதிரியாகத்தான் நடத்தப்படவேண்டும். தான் யார், தான் எவரைக் காதலிக்க வேண்டும், தான் எதைத் தேர்வு செய்ய வேண்டும் இவையெல்லாம் ஒவ்வொரு தனி மனிதனின் விருப்பத்திற்குட்பட்டது. ஒரு சுதந்திர நாட்டில் இவையெல்லாம் கேள்விக்குட்படுத்தப்படக்கூடாது. ஆனால் இவையெல்லாம் உண்மையில் கேள்விக்குட்படுத்தப்பட்டு சார்ந்தோரை வருத்தத்திற்கு உள்ளாக்குகின்றன என்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. இந்த சமூகம் முன்னேற்றத்தை நோக்கி நகராமல் தேங்கியுள்ளது வேதனையளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டப்பிரிவு 377 நீக்கப்பட்டது அனைத்துதரப்பு மக்களையும் ஒன்றிணைக்க முயலும் ஒரு வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பு என்றும், தான் அந்தத் தருணத்தில் ஒரு இந்தியனாய் பெருமிதம் கொண்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.