எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான மான்ஸ்டர் திரைப்படத்தின் சக்சஸ் மீட் சென்னை பிரசாத் லேப்பில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசுகையில்,
'வாலி' படத்தில் இயக்குநராக ஆரம்பித்து இன்று 'மான்ஸ்டர்' படம் வரை வந்துள்ளேன். எனக்கு கனவுகளும், ஆசைகளும் அதிகம். ஒரு நடிகனாக சாதிக்க வேண்டும் என எண்ணி கடந்த 25 வருடங்கள் ஓடிவிட்டன. என் படத்துக்கு முதல்முறையாக இவ்வளவு குடும்பங்கள் வந்துள்ளது. அந்த வகையில் 'மான்ஸ்டர்' படம் எனக்கு ஒரு புதிய பயணத்தின் தொடக்கம். இப்படியும் படம் எடுக்கலாம் என்பதை தவறவிட்டு விட்டேன் இவ்வளவு நாள்.
'மான்ஸ்டர்' படம் திரையிடப்பட்ட திரையரங்குகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. ஒரு குத்து பாடல் இல்லை, கிளாமர் இல்லை என்றாலும் படத்துக்கு கூட்டம் வருவது மகிழ்வாக உள்ளது. இது புதிய நம்பிக்கையை கொடுக்கிறது. திறமை வாய்ந்த இயக்குநரிடம் நம்மை ஒப்படைத்துவிட்டால் போதும், நல்ல நடிகனாக ஜொலிக்க முடியும். நல்ல கதைகள் அமையவில்லை என்றால் என்னிடம் உள்ள கதைகளைக் கொண்டு படம் எடுப்பேன் என்று தெரிவித்தார்.