கோவா தலைநகர் பானஜியில் நடைபெறவுள்ள நிவான் ஹேண்ட்பான் மற்றும் உலக இசைத் திருவிழாவில் பிரபல டிரம்ஸ் இசைக்கலைஞரும், இசையமைப்பாளருமான டிரம்ஸ் சிவமணி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார்.
மியூசிக்கரி நிறுவனம் நடத்தும் இந்த இசைத் திருவிழா இன்று முதல் வரும் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை சிவமணி தொடங்கி வைத்து சிறப்பிக்கிறார்.
மேலும், இந்த இசைத் திருவிழாவில், இசைக்கலைஞர்கள் கபேகாவோ, மார்ட்டின் டுபோயிஸ், கிரெக் எல்லிஸ், ஆர்ச்சர் மற்றும் டிரிப், ஆண்ட்ரி தான்சு, நாதுலால் சோலங்கி, ராகினி சங்கர், த்ரிதா சின்ஹா மற்றும் இந்திய ஹேண்ட்பான் இசைக்கலைஞர்களான ஜெய் கோசர் மற்றும் சாமுவேல் மூர்த்தி ஆகியோரின் சிறப்பு நிகழ்ச்சிகளும் அரங்கேறவுள்ளன.
இதுகுறித்து பேசிய சிவமணி, 'நிவானின் இந்த முயற்சியில் நான் ஒரு அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். ஒரு டிரம்மர் மற்றும் ஒரு தாளவாத்தியராக இருப்பதால், இசை ஒருவரின் ஆன்மாவிலும் மனதிலும் எவ்வளவு இனிமையை, அமைதியை ஏற்படுத்தும் என்பதை நான் அனுபவித்திருக்கிறேன். இந்த மூன்று நாள் கொண்டாட்டத்தில் பார்வையாளர்கள் ஒரு புதிய அளவிலான மனநிறைவை அனுபவிப்பார்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்' எனத் தெரிவித்தார்.