சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வந்துகொண்டிருந்த சிவகார்த்திகேயனை, மெரினா என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகம் செய்தவர் இயக்குநர் பாண்டிராஜ். அதைத் தொடர்ந்து மனம் கொத்தி பறவை திரைப்படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அதன்பின் எதிர்நீச்சல், மான் கராத்தே, வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கிச்சட்டை, ரெமோ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்த அவர் தமிழ்சினிமாவில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து அவர் அடுத்து நடிக்கும் படத்திற்கான வேலைகள் தொடங்கியது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு எங்க வீட்டு பிள்ளை என்று பெயர் வைக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில் சிவகார்த்திகேயனின் புதிய படத்திற்கான பெயர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த படத்துக்கு 'நம்ம வீட்டு பிள்ளை' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, யோகி பாபு, சூரி, நட்டி, அனு இம்மானுவேல் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களும் நடிக்கின்றனர். இதற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார்.
மேலும் இதன் செகண்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.