நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டாக்டர்' படம் அக்டோபர் 9ஆம் தேதி வெளியானது. பிரியங்கா நாயகியாக நடித்துள்ள இப்படத்தை எஸ்.கே. புரொடக்ஷனுடன், கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
கரோனா தொற்றுப் பரவல் அச்சுறுத்தலுக்குப் பின், திரையரங்குகளில் 'டாக்டர்' படம் வெளியானது. இப்படத்தை குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் ரசித்தனர்.
கவனத்தை ஈர்த்த 'செல்லம்மா'
திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. 'டாக்டர்' படம் வெளியாவதற்கு முன்பே இதில் இடம்பெற்ற, 'செல்லம்மா' பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெருமாளவில் ஈர்த்தது.
'டாக்டர்' படம் வெளியான தினம் முதல் தற்போது வரை, வசூலில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'ரெமோ' தான், இதுவரை அவரின் படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாக இருந்தது.
இந்நிலையில், 'டாக்டர்' படத்தின் திரையரங்கு மொத்த வசூல் ரூ.100 கோடியை கடந்துவிட்டதாக அதன் தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கே.ஜே.ஆர் நிறுவனம் தங்களுடைய ட்விட்டரில், "இந்த வேற மாறி பிளாக்பஸ்டர் படத்தின் 25 நாள்களும் உங்களைச் சிரிக்க, கைதட்ட உற்சாகப்படுத்த வைத்துள்ளது. டாக்டர் திரைப்படம் திரையரங்குகளின் மொத்த வசூல் ரூ.100 கோடியைக் கடந்திருப்பதை நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம். இது உங்களுக்கும் எங்களுக்குமான வெற்றி'' எனப் பதிவிட்டுள்ளனர்.
இதற்கிடையில், 'டாக்டர்' திரைப்படம் தீபாவளி கொண்டாட்டமாக சன் டிவியில் ஒளிப்பரப்பாகவுள்ளது. அதையடுத்து ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் செல்லம்மா வீடியோ பாடல் வெளியீடு