அண்ணன்-தங்கையின் அன்புக் கதைகள் பூமி பிறந்த போதே தோன்றியவை. ராவணன் - சூர்ப்பனகையின் கண் மூடித்தனமான ராட்சஸ பாசம் ராமாயணத்துக்கு விதையாக விளங்கியது. புராணக் காப்பியங்கள் முதல் இன்றைய திரைக்காவியங்கள் வரை சகோதரத்துவத்தை போற்றும் ஏராளமான படங்கள் வெளிவந்துள்ளன. 'நினைத்ததை முடிப்பவன்', 'முள்ளும் மலரும்', 'தங்கைக்கோர் கீதம்', 'கிழக்குச் சீமையிலே', 'சின்னத்தம்பி', 'சமுத்திரம்', 'சொக்கத் தங்கம்', 'திருப்பாச்சி' என அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து வளமான படங்கள் வெளிவந்துள்ளன. இவற்றுக்கெல்லாம் மணி மகுடமாய் இருக்கும் திரைப்படம் என்றால் அது 'பாசமலர்' திரைப்படம்தான். அது குறித்த ஒரு சிறப்பு செய்தி தொகுப்பு...
இயக்குநர் பீம்சிங், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகையர் திலகம் சாவித்ரி, ஜெமினி கணேசன், கவிஞர் கண்ணதாசன், இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன், ராமமூர்த்தி, பின்னணி பாடகர் டி. எம். எஸ், பாடகி சுசிலா, இப்படி ஒரு அற்புதமான காம்பினேஷனில் வெளிவந்த படம். ராஜாமணி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் சிவாஜியும், சாவித்ரியும் அண்ணன் தங்கைகளாக வாழ்ந்து காட்டினர்.
கர்வங்கள் அழிந்து காதல் ‘அலைபாயுதே’ - #20yearsofalaipayuthey
"சேர்ந்தே பிறந்து... சேர்ந்தே வளர்ந்து... சேர்ந்தே மறைந்த செல்வங்களின் கதை" என்ற விளம்பரத்தோடு 1961ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் தேதி திரைக்கு வந்தது பாசமலர். அண்ணன், தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுத்த படங்களில் இப்படம் 32 வாரங்கள் ஓடி, காவிய அந்தஸ்து பெற்றது. சிவாஜி, ஜெமினி, சாவித்ரி ஆகியோரின் வெற்றி மகுடத்தில் ஒரு வைரக் கல்லாய் அமைந்தது இந்தப் படம்.