நீங்கள் பாடி நடித்துள்ள 100% காதல் பற்றி?
'100% காதல்' படத்தில் நான் பாடி நடித்திருக்கிறேன். அந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கு நன்றி. அதே நேரத்தில் ஜிவி படங்களில் தொடர்ந்து பாடிக்கொண்டு வருகிறேன். 'ஆடுகளம்', 'சகுனி', 'செம' என இதுவரை 10 படங்களில் அவருடன் பணியாற்றியுள்ளேன்.
நடிக்க ஆரம்பித்து உள்ளீர்கள், தொடர்ந்து நடிப்பீர்களா?
இது எல்லாம் நம்முடைய தொழில்தானே. வேற ஏதாவது ஒரு தொழில் பார்க்க போனாதான் இவர் ஏன் அத விட்டுட்டு இந்த தொழிலுக்கு வந்தார் என்ற கேள்வி வரும். படத்தில் நடித்தாலும், பாடினாலும், எழுதினாலும், எல்லாமே சினிமா சார்ந்த தொழில்தான். ஆனால், திரையில் தோன்றினால் மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தப் படுவோம். அதன் மூலமாக நமது திறமைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்பதால், இப்போது திரையில் தோன்றுவது தேவைப்படுகிறது. முதலில் நான் சிறிய அளவில் படிப்படியாக நடிப்பை கற்றுக்கொண்டு அதன்பிறகு படங்களில் நடிக்க தொடங்கவே ஆசைப்படுகிறேன். அப்படி இருந்தால்தான் நீண்ட நாட்களுக்கு இத்துறையில் நிற்க முடியும். சிறு சிறு வேடங்களில் நடித்து பின்னர் ஒரு முழுநீள படத்தில் நடித்து மக்கள் என்னை ஏற்றுக்கொண்டால், நடிப்பிலும் என் பயணம் தொடரும்.
இப்போது நீங்கள் பணியாற்றி வரும் படங்கள் குறித்து ?
ஜிவி பிரகாஷ் இசையில் தற்போது நான்கு படங்களில் பாடியுள்ளேன். தனுஷ் படத்தில் பாடியிருக்கிறேன். 'காதலைத் தேடி நித்தியானந்தா' படத்தில் பாடியுள்ளேன். இசையமைப்பாளர் ரகுநந்தன், யுவன் ஷங்கர் ராஜா இசையிலும் பாடி வருகிறேன்.
100% காதல் படத்தில் பெரிய நடிகர்களுடன் நடித்த அனுபவம்?
'பழைய வண்ணாரப்பேட்டையில்' உன்னதான் நினைக்கயில் பாட்டுக்கு நான் ரோபோ சங்கர், ரிச்சர்ட், பிரஜின் ஆகியோருடன் பாடி ஆடியுள்ளேன். அது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. அடுத்து கவுண்டமணி சாரோட படம் முழுவதும் நடிக்கக்கூடிய ஒரு வாய்ப்பு கிடைத்தது. 'மணியார் குடும்பம்' படத்தில் தம்பி ராமையா உடன் நடித்துள்ளேன். 'தர்மபிரபு' படத்திலும் பாடி நடித்துள்ளேன். '100% காதல்' படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் பாடி நடித்துள்ளேன்.
தனுஷுக்கு பாடியது அவரே பாடியது போல் இருந்தது! சினிமா துறையில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாய்ப்புகள் எப்படி இருக்கு, நாட்டுப்புற பாடல்கள் குறித்து வகுப்பெடுக்க உள்ளீர்களா?
இப்பொழுது நாட்டுப்புற கலைஞர்களுக்கு அதிக அளவில் திரைத்துறையில் வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. இதற்கு காரணம் தொலைக்காட்சி, பத்திரிகைகள், வானொலிகள் அதிக வாய்ப்புகள் கொடுக்கின்றன. இவை தவிர தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதில் இணையதளங்கள் ஒரு தளத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இணையதளங்கள் மூலமும் அவர்களுடைய திறமைகள் அங்கீகரிக்கப்படுகிறது. அவர்களுக்கு என்னால் முடிந்த ஆலோசனைகள் மற்றும் தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன். என்னுடைய பாடல்களை 2 பேர் பகிர்ந்து பாடுகிறோம். 'எதுக்கு மச்சான் காதல்', 'ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்', 'வேணாம் மச்சான் வேணாம்' போன்ற பாடல்கள் மற்ற நாட்டுப்புற கலைஞர்களுடன் பகிர்ந்து பாடி உள்ளேன்.
இந்த நடிகருக்கு நான் பாடினால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் யாரை எண்ணுகிறீர்கள்?
அப்படி எதுவும் இல்லை. ஆனால் முதன் முதலில் ஹீரோவுக்கு என்று நான் பாடியது தனுஷுக்கு, 'ஒத்த சொல்லால’ பாடல், அந்த பாடல் அவரே பாடியது போன்றே இருக்கும். அதேபோன்று 'கருப்பு நிறத்தழகி' பாடல் பாடினேன், அந்த பாடலும் நடிகர் கார்த்திக் அவர்களே பாடியது போன்று இருக்கும். இதுபோல மற்ற ஹீரோக்களும் எனக்கு பாட வாய்ப்பு கொடுத்தால் கண்டிப்பாக நான் பாடுவேன்.