சென்னை: பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ். பி. சரண் காணொலி வெளியிட்டு, ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பாடகர் எஸ்.பி. சரண் வெளியிட்டுள்ள காணொலியில் கூறியிருப்பதாவது: அப்பாவின் உடல்நிலை குறித்த கேட்டறியும் விதமாக காலை முதலே ஏராளமான அழைப்புகள் போனில் வந்த வண்ணம் இருக்கிறது. வென்டிலேட்டர் உதவியுடன் அவர் நலமுடன் உள்ளார். அவரது நுரையீரல் செயல்பாடு நேற்றைவிட (ஆக.14) இன்று(ஆக.15) நன்றாகவே உள்ளது. தொடர் சிகிச்சை மூலம் மெல்ல மெல்ல குணமடைவார் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உங்களது பிரார்த்தனை மூலம் அவர் மீண்டெழுந்து வரும் வரை அனைவரும் பொறுமை காக்க வேண்டும் என்று காணொலியில் கூறியுள்ளார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும், உடல்நிலை முன்னேற்றம் கண்டிருப்பதாக மருத்துமனை சார்பில் இன்று (ஆகஸ்ட் 15) அறிக்கை வெளியிடப்பட்டது. முன்னதாக, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று (ஆகஸ்ட் 14) இரவு தகவல்கள் வெளியான நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர் இமயம் பாரதிராஜா, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் உள்பட திரையுலகினர் பலரும் உடல்நிலை தேறி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் மீண்டு வர பிரார்த்திப்பதாக சமூக வலைதளங்களில் கருத்துகளை பகிர்ந்தனர்.
அப்பாவின் உடல்நிலை நிலவரம் குறித்து தெளிவுப்படுத்திய எஸ்.பி. சரண் இதைத்தொடர்ந்து தனது தந்தை உடல்நிலை குறித்து தவறான தகவல்கள் வெளியாகியிருப்பதாகவும், அவர் உடல்நிலை மோசமாக இருந்தாலும், கவலைக்கிடமாக இல்லை எனவும் ட்விட்டரில் தெளிவுப்படுத்தினார் பாடகர் எஸ்.பி. சரண். இதையடுத்து, தற்போது காணொலி ஒன்றில் மூலம் தந்தையின் உடல்நிலை குறித்து மீண்டும் எஸ்.பி.சரண் தெளிவுப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "திரைப்பட கதையை தேர்வு செய்யும்போது பயப்படுவேன்"- சமந்தா