'வெற்றி வேலா' முருகனுக்கான ரொமான்டிக் பாடல் - பாடகர் க்ரிஷ்ஷின் புதிய ஆல்பம் - முருகனின் பாடல்கள்
சென்னை: முருகர் பாடலை கேட்டுவிட்டு தூங்கினால் எப்படியிருக்கும் என்கிற சிந்தனையில் உருவானது தான் 'வெற்றி வேலா' ஆல்பம் என பாடகர் க்ரிஷ் தெரிவித்துள்ளார்.
பாடகரும் இசையமைப்பாளருமான க்ரிஷ் ஆக்ரோஷம் கொண்ட முருகனை விடுத்து, அமைதியும் அழகும் நிறைந்த பார்வையில் முருகனை போற்றும் விதமாக, முருக கடவுளின் ஆறுபடை வீடுகளை மையப்படுத்திய, ஆறு பாடல்கள் கொண்ட'வெற்றி வேலா' என்ற ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். இந்த இசை ஆல்பத்தை சோனி மியூசிக் இந்தியா நிறுவனம் வெளியிடுகிறது.
இதுகுறித்து பாடகர் க்ரிஷ் கூறுகையில், "சமீப காலமாக முருகர் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளார். பல்லாண்டுகளாக முருகர் பாடல்கள் பலவற்றை நாம் கேட்டு வருகிறோம். ஆனால், அதில் முருக கடவுள் அதிகமான ஆக்ரோஷம் கொண்டவராக காட்டப்படுவதாக எனக்குத் தோன்றியது.
முருகு என்றாலே 'அழகு' என்று தான் அர்த்தம். முருக கடவுள் எப்போதும் அமைதியும் அழகும் நிறைந்தவர். மனதை சாந்தப்படுத்துபவர்.
முருகர் பற்றிய பாடல் ஏன் மெல்லிய வடிவில் மனதை சாந்தப்படுத்தக்கூடாது எனத்தோன்றியது. இசையை கேட்கும் பழக்கமுள்ள அனைவரும் நல்ல மெல்லிய மெலோடி இசையை கேட்ட பிறகே தூங்குவார்கள். நம் அனைவருக்குமே இருக்கும் பழக்கம் அது.
அந்த வகையில் முருகர் பாடலை கேட்டுவிட்டு தூங்கினால் எப்படியிருக்கும் என்கிற சிந்தனையில் உருவானது தான், இந்த ஆல்பம்.
முருகனுக்கு ரொமான்டிக் பாடல் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படிதான் இந்த ஆல்பம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இது முழுக்க ரொமான்டிக் பாடல் அல்ல; மென்மையான மெலோடி வடிவில் முருகனை கொண்டாடுவதே இந்த ஆல்பம்.
முருகனின் ஆறுபடை வீடுகளை அடிப்படையாக கொண்டு திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை என ஆறு பாடல்கள் இந்த ஆல்பத்தில் அமைந்துள்ளது.
எனது மகள் ஷ்வியா பாடும் ஆசையில் இருந்ததால் பழனி பாடலை அவரைப் பாட வைத்திருக்கிறேன். ஒவ்வொரு பாடலும் இந்த ஆல்பத்தில் முருகனின் படத்துடனும், அதன் கீழே மற்ற விவரங்களும் இருக்கும்படி அமைக்கப்பெற்றிருக்கும்.
எல்லோரும் விரும்பும்படி, அனைவரும் ரசிக்கும்படி இந்த ஆல்பத்தை அமைத்திருக்கிறேன். இதன் ஃபர்ஸ்ட் லுக்கில் கடவுள் இல்லாமல் கடவுளை காட்டும் முயற்சியாக வெறும் வேல் மட்டுமே வைத்து வடிவமைத்தோம். இந்த ஆல்பம் எங்களின் மனமார்ந்த முயற்சி" என்று கூறினார்.