மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்து 2016ஆம் ஆண்டு வெளியான படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'. இந்தப் படத்தில் நடிக்க சிம்புவுக்கு ரூ. 8 கோடி சம்பளம் பேசப்பட்டு, ரூ. 1.51 கோடி முன்பணமாக வழங்கப்பட்டது.
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் இதில் சம்பள பாக்கி 6.48 கோடி ரூபாயை பெற்றுத்தரக் கோரி நடிகர் சிம்பு, நடிகர் சங்கத்தில் புகார் மனு அளித்திருத்திருந்தார். அதேசமயம், படத்தால் தனக்கு ஏற்பட்ட இழப்பை சிம்புவிடம் வசூலித்துத் தரக் கோரி தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், இணையதளங்களில் தனக்கு எதிராக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாகக் கூறி, மைக்கேல் ராயப்பனுக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் சிம்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்களுக்கு தற்போது தனி அலுவலர்களை அரசு நியமித்துள்ளதால், நடிகர் விஷாலை இந்த வழக்கில் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்றும், இரு சங்கங்களின் தனி அலுவலர்களை இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக இணைக்க வேண்டும் என விஷால் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனைக் கேட்ட நீதிபதி, இதுதொடர்பாக திருத்த மனுவை தாக்கல் செய்ய சிம்புவுக்கு அறிவுறுத்தி, விசாரணையை ஜனவரி 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.