சென்னை:இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தரும் அவரது மனைவி உஷாவும், சிம்பு படத்தை வெளியிடவிடாமல் கோலிவுட்டில் கட்டப் பஞ்சாயத்து செய்துவருவதாக சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.
இதனையடுத்து அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது உஷா கூறியதாவது, "நடிகர் சிம்பு நடித்த, 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தைத் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார். அந்தப் படத்தை விநியோகம் செய்த விநியோகஸ்தருக்கு நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. அந்த நஷ்டத்தை மைக்கேல் ராயப்பன் தான் தரவேண்டும்.
ஆனால், நடிகர் சிலம்பரசன் தான் தரவேண்டும் என்று கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கிறார். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஒவ்வொரு சிலம்பரசன் நடித்த படங்கள் ஆரம்பிக்கும்போதும் பஞ்சாயத்துக்கு, எங்களைக் கூப்பிட்டு, பல கோடிகளைப் பெற்றுக்கொண்ட பிறகுதான், படத்தில் நடிப்பதற்கு அனுமதிக்கிறார்கள்.
அதேபோல முடியும்போதும், படத்தை வெளியிடுவதற்கு 'ரெட் கார்டு' என்ற பெயரில், படத்திற்கு தடைபோட்டுப் பல கோடி தரவேண்டும் என்று எங்களை மிரட்டுகிறார்கள்.
இப்போது புதிதாக அருள்பதி என்பவர் தமிழ்த் திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கம் என்று ஒரு சங்கத்தை ஆரம்பித்துள்ளார். அவர் இருபது, இருபத்தைந்து பேரை வைத்து சிலம்பரசனின் எந்த படத்தையும் ரிலீஸ் பண்ணவிடாமல் கட்டப்பஞ்சாயத்து செய்து வருகின்றார். எங்களுக்குப் பக்க பலமாக அரசு இருக்கிறது.
இதை முதலமைச்சரின் கவனத்திற்கு நிச்சயமாகக் கொண்டு செல்வோம். அதற்காக அவருடைய வீட்டு வாசலிலும் உண்ணாவிரதம் இருப்பதற்குத் தயாராக இருக்கிறேன்.