சித் ஸ்ரீராம் இசையில் அழகானப் பாடலை பாடியதில் மகிழ்ச்சி என்று சக்தி ஸ்ரீகோபாலன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழில் வெளியான 'படைவீரன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் தனா. இவர் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். இவர் தற்போது 'வானம் கொட்டட்டும்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார். மடோனா செபாஸ்டியன், சரத்குமார் ராதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இயக்குநர் மணி ரத்னம் தயாரிக்கிறார். ப்ரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்கிறார்.
வசீகர குரலால் ரசிகர்களை மயங்க வைத்து வரும் சித் ஸ்ரீராம், மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தின் மூலம் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில், சித் ஸ்ரீராம் பாடிய பாடல்கள் எல்லாம் ரசிகர்களின் மனதில் ரிங்டோனாக ஒலிக்க ஆரம்பித்தன. இவர் பாடிய 'தள்ளிப் போகாதே' பாடல் ஆல்டைம் ஃபேவரைட்டாக இருந்து வருகிறது. தமிழில் மட்டும் பாடிக்கொண்டிருந்த இவர் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கும் இவர் பாடிய பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன.