தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தகராறில் ஆரம்பித்த சந்திப்பு - விவேக்குடனான நட்பை பகிரும் ஷிஹான் ஹுசைனி - மறைந்த விவேக்கிற்கு இரங்கல்

மறைந்த விவேக்கிற்கு நடிகரும் அவரது கல்லூரி தோழருமான ஷிஹான் ஹுசைனி ஃபேஸ்புக்கில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

HU
HU

By

Published : Apr 17, 2021, 4:39 PM IST

'ஜனங்களின் கலைஞன்' எனப் போற்றப்படும் நடிகர் விவேக் நெஞ்சுவலி காரணமாக நேற்று (ஏப்ரல் 16) சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு எக்மோ மருத்துவ அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் நடிகர் விவேக் இன்று (ஏப்ரல் 17) அதிகாலை 4.35 மணியளவில் காலமானதாக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து விவேக்கின் மறைவுக்கு திரைப் பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

அந்தவகையில், விஜய்யின் பத்ரி படத்தில் பயிற்சியாளராக வந்த நடிகர் ஷிஹான் ஹுசைனி தனது ஃபேஸ்புக்கில் விவேக்கின் மரணம் குறித்து இரங்கல் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில், "நெஞ்சம் கனக்கிறது! இந்த உலகம் ஒரு மாபெரும் கலைஞனை இழந்துவிட்டது. இரண்டு கல்லூரிகளில் விவேக் எனக்கு ஓராண்டு ஜூனியர் (மதுரை அமெரிக்கன் கல்லூரி, கவிதாலயா என்ற மாபெரும் நடிப்புக் கல்லூரி). எங்கள் சந்திப்பு அமெரிக்கன் கல்லூரியில் ஒரு தகராறில் ஆரம்பித்தது.

'டேய் உன்னை நக்கல் பண்ணி ஒரு ஜூனியர் ஆடிட்டோரியம்ல ட்ராமா போட்டுக்கிட்டு இருக்கானாம். ஒரே கைதட்டலாம், வா மச்சான் போய் சாத்தலாம்னு' சிலர் வந்து என்னை அழைத்தார்கள்.

ஒரு மாசத்துக்கு முன்னால்தான் நான் கல்லுரியில் ஒரு மாபெரும் கராத்தே டெமோ போட்டு அது பெரிய டாக். அந்தக் கராத்தே டெமோவை உல்டா பண்ணி, கேலி நாடகம் போட்டு கைத்தட்டு வாங்கிக்கொண்டிருந்தவனை தேடி நானும் என் நண்பர்களும் கிளம்பினோம். பெரிய தகராறு நடக்க இருப்பதை உணர்ந்த கல்லூரி பேராசிரியர்கள் வழியில் எங்களை தடுத்து நிறுத்தினர். நாடகம் பாதியில் நிறுத்தப்பட்டது.

அந்த ஜூனியர் சமாதானம் பேச அழைக்கப்பட்டார். அங்கிருந்த பேசிரியர்களைத் தள்ளிவிட்டு அந்தப் பையன் சட்டையைப் பிடித்தேன். என்னை நேராகப் பார்த்த அந்தப் பையன், 'சார் என்னை அடிக்கணும்னா அடிங்க. உங்க டெமோ எனக்குப் பெரிய இன்ஸ்பிரேஷன். என்னால உங்கள மாதிரி ஓடு, செங்கல் உடைக்க முடியாது. அதனாலே அப்பளம் வச்சு உடைச்சேன், அவ்வளவுதான் அண்ணா' என்றார்.

பின்னர் சட்டையை விட்டு பலமாகச் சிரிச்சேன். நாடகம் மீண்டும் தொடர்ந்தது. நானும் அதைப் பார்த்து அனைவரோடு பலமாகக் கைத்தட்டினேன். அந்தப் பையன்தான் சில ஆண்டுகளுக்குப் பின்னால், உலகம் போற்றிய 'நடிகர் விவேக்!'

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விவேக் பெரிய ஹிட். இவர் காமெடி நாடகம் என்றாலே மாணவர்களும், ஆசிரியர்களும் மிஸ் பண்ணமாட்டார்கள். கல்லூரியில் யாரையும் விட்டுவைக்க மாட்டார். இவரது கதாகாலட்சேபம் ரொம்ப பாப்புலர். எல்லோரையம் மிமிக்கிரி மூலம் கிண்டல் பண்ணுவார்.

தமிழ் நாடகப் போட்டிகள் என்றால் கல்லூரிகளுக்கு இவரை அனுப்புவார்கள். ஆங்கிலப் போட்டிகளுக்கு நானும் என் குழுவும் செல்வோம். எப்போதுமே நாங்கள்தான் பரிசுகளை அள்ளிச் செல்லுவோம். இவர் நாடகத்தை நான் மிஸ் பண்ணமாட்டேன். என் நாடகங்கள் அனைத்துக்கும் விவேக் வருவார்.

மிக நல்ல நண்பர்கள் ஆனோம். கல்லூரி எதிரே உள்ள ஹோட்டலில் டீ சமோசா சாப்பிட்டு மணிக்கணக்கில் கதைகளை விவாதிப்போம். சினிமாவில் கே. பாலச்சந்தர் மூலமாக மட்டுமே அறிமுகமாக வேண்டும் என்று கூட்டுக்கனவு காண்போம். 1987இல் ' புன்னகை மன்னன்' படம் மூலம் பாலச்சந்தர் சார் என்னை அறிமுகப்படுத்தியபோது என்னைப் பாராட்டிய முதல் நபர் விவேக்தான். அதே ஆண்டு எனக்கு அடுத்ததாய் விவேக்கை பாலசந்தர் சார் 'மனதில் உறுதி வேண்டும் ' படம் மூலம் அறிமுகப்படுத்தினார்.

பல ஆண்டுகள்... பல சந்திப்புகள்... அவரோடு இணைத்து நான் நடித்த முதல், கடைசிப்படம், விஜய் நடித்த 'பத்ரி!' விவேக் தமிழ்ப்பட உலகத்தின் ஈடு இணையில்லா மாபெரும் நகைச்சுவை நடிகர், சமூகப் போராளி... படைப்பாளி. அவரது மரணம்... மாபெரும் இழப்பு.

எனக்கும் திரை உலகத்துக்கும் ஐந்தாண்டுகளுக்கு முன்னாள் மகன் பிரசன்னாவை இழந்து இப்போது விவேக்கை இழந்து தவிக்கும் சகோதரி அருள்செல்வி விவேக்குக்கு ஆழ்ந்த இரங்கல்கள் . விவேக் பாஸ் வில் மிஸ் யூ பாஸ்!" எனப் பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details