தமிழ் சினிமாவில் 'ஜீனியஸ்' என அழைக்கப்படுவர் இயக்குநர் செல்வராகவன். இவர் சிறுவயதில் தான் அனுபவித்த துயரங்களை தனது சமூகவலைதளப்பக்கத்தில் தனது இளம் வயது புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். அதோடு இளம் வயது செல்வராகவனுக்கு இப்போது இருக்கும் செல்வராகவன் அறிவுரை வழங்குவது போல் அந்த பதிவு எழுதப்பட்டுள்ளது.
அந்த பதிவில் அவர், "அன்புள்ள செல்வா (வயது 14) : உன் உருவத்தை வைத்து இவ்வுலகம் உன்னை பார்த்து சிரிக்கிறது. ஏனென்றால் நீ ஒரு மாற்று திறனாளி. உனக்கு ஒரு கண்ணில் பார்வை குறைபாடு உள்ளது. நீ எங்கே சென்றாலும் மக்கள் உன்னை பார்த்து சிரிக்கிறார்கள் அல்லது கேலி செய்கிறார்கள். அதை நினைத்து ஒவ்வொரு இரவும் நீ அழுகிறாய்.
சில நேரங்களில் ஏன் என் கண்ணை பறித்தாய் என்று கடவுளிடம் கேட்கிறாய். ஆனால் கவலைப்படாதே செல்வா. இன்னும் சரியாக பத்தே வருடங்களில் ஒரு மிகப்பெரிய வெற்றி படத்தை எழுதப் போகிறாய். அது உன் வாழ்வையே மாற்றப்போகிறது. இதே உலகம் அப்போதும் உன்னை பார்க்கும். ஆனால் கேலி செய்யும் நோக்குடன் அல்ல. மாறாக மரியாதையாடனும் நம்பிக்கையுடனும் இன்னும் பத்து வருடங்களில் சிறந்த படங்களை எடுத்து தமிழ் சினிமா வரலாற்றில் நீ இடம் பிடிப்பாய்.