நடிகர் நானி மற்றும் சுதீர் பாபு நடிப்பில் வெளியாக உள்ள படம் 'வி'. நானியை அறிமுகம் செய்த இயக்குநர் மோகன கிருஷ்ணா இந்திரகன்டி இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். நானியின் 25-ஆவது படமான இது, பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட வித்தியாசமான ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ளது. இந்த படம் இன்று (செப்டம்பர் 5) அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது.
இந்நிலையில், நடிகர் நானி குறித்தும் அவருடன் பணியாற்றிய தனது அனுபவங்கள் குறித்தும் இயக்குநர் மோகன கிருஷ்ணா இந்திராகன்டி தெரிவித்துள்ளார். தனது கண்ணில் பிரச்னை இருந்ததால் கண்ணை மறைக்கும் கருப்புக் கண்ணாடி அணிந்து கொண்டு என் அலுவலகத்திற்கு வந்த வித்தியாசமான இளைஞர்தான் நானி. இன்று அவர் இருக்கும் நிலைக்கு அவரது உண்மையான உழைப்புதான் காரணம். இந்த திறமையான இளைஞரை நான் அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவரின் இந்த வெற்றிக்கு காரணம் அவர்தான். கடுமையாக உழைத்து துணிந்து நின்று இடர்களை சந்திக்கும் குணம் கொண்டவர் நானி. ஆபத்துகளை எதிர்கொள்ள அவர் தயங்கியதில்லை. வழக்கத்தை மீறி அவர் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார், துணிந்து சில முயற்சிகள் செய்தார், கீழே விழுந்தார் பின்னர் வெற்றியோடு எழுந்து நின்றார். இதை நான் அவரது பயணத்தின் முதல் நாளிலிருந்து கண்டு வியந்திருக்கிறேன்.