நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் அமேசான் ஃப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான தொடர், ‘ஃபேமிலி மேன் 2’. ஈழ தமிழர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் இதில் இடம்பெற்றுள்ளதாகக் கூறி பலரும் இந்தத் தொடரைத் தடைசெய்ய வேண்டும் எனக் குரல் கொடுத்துவருகின்றனர். அந்தவகையில் ‘ஃபேமிலி மேன் 2’ தொடரை தடைசெய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகமெங்கும் வாழும் தமிழர்களின் பெரும் எதிர்ப்பையும் மீறிக் கடந்த ஜூன் 4ஆம் தேதி உங்களது அமேசான் பிரைம் வீடியோ தளத்தில், ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடர் வெளியாகி, தமிழர்களுக்கு மிகுந்த மனவலியை ஏற்படுத்தியுள்ளது.
வன்மத்தோடு எடுக்கப்பட்டுள்ளது:
தமிழர்களைச் சீண்டும் நோக்கில் திட்டமிட்ட வன்மத்தோடு எடுக்கப்பட்டுள்ள அத்தொடரில் வீரம் செறிந்த ஈழ விடுதலைப்போராட்டத்தை மலினப்படுத்தி, கொச்சைப்படுத்தும் வகையில் வைக்கப்பட்டிருக்கிற சித்தரிப்புகளும், காட்சியமைப்புகளும் குறித்துக் கேள்வியுற்றுப் பேரதிர்ச்சியடைந்தேன்.
தமிழர்களின் தாயகத்தை மொத்தமாய் ஆக்கிரமித்து, ஆதிக்கம் செய்து, அழித்தொழித்த அரசப்பயங்கரவாதிகளான சிங்கள ஆட்சியாளர்களின் குரல் போல ஒலித்து, தமிழர்களை மிகக்கீழ்த்தரமாகக் காட்டி, போர் வெறி கொண்ட பயங்கரவாதிகளாகவும், தீவிரவாதிகளாகவும் சித்தரிக்க முற்படும் வகையில் இணையத்தொடரை உருவாக்கியிருப்பதற்கு எனது வன்மையான கண்டனத்தைப் பதிவுசெய்கிறேன்.
தடை செய்ய வேண்டும்:
'பேமிலி மேன் 2' இணையத்தொடரை முழுக்க முழுக்கத் தடைசெய்யப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் ஒருமித்த குரலாக இருக்கிறது. இந்நூற்றாண்டின் பாரிய இனப்படுகொலைக்கு ஆளாகிப் பெரும் காயம்பட்டு அழிவின் விளிம்பில் நிற்கும், 12 கோடி தமிழ்த்தேசிய இன மக்களின் உள்ளத்து உணர்வுகளை உரசிப்பார்ப்பதாகவும், தரம் தாழ்த்துவதாகவுமே இத்தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதனை மீண்டும் உரைக்கிறேன்.
11 ஆண்டுகளைக் கடந்தும் இனப்படுகொலை:
ஈழப்போர் முடிவுற்று 11 ஆண்டுகளைக் கடந்தும் இனப்படுகொலைக்கு எவ்விதப் பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணையோ, பொது வாக்கெடுப்போ கிடைக்கப்பெறாத தற்காலச்சூழலில் அறப்போராட்டங்களின் வாயிலாகவும், சட்டப்போராட்டங்களின் வாயிலாகவும், ஐ.நா.வில் நடக்கும் அமர்வுகளின் வாயிலாகவும், உலக நாடுகளில் பரவி வாழும் தமிழர்களின் அணிச்சேர்க்கை மூலமாகவும் தமிழர்கள் எங்களுக்கு இழைக்கப்பட்டுள்ள கொடும் அநீதியைப் பன்னாட்டுச்சமூகத்திற்கு விளக்கி, அதற்கான நீதி கோரி நிற்கிறோம்.
போர் மரபுகளுக்கு மாறாக ஒற்றை நகர்வையும் முன்வைத்திடாது, அழித்தொழிக்கப்படும் நாள் வரையிலும்கூட சிங்களர்களின் அந்நிய ஆதிக்கத்துக்கெதிராக மட்டுமே போராடி, சிங்கள மக்களைக் குறிவைக்காது, தமிழர்களின் அறத்தையும், மறத்தையும் நிலைநாட்டி, தமிழ்த்தேசிய இனத்தின் பாதுகாப்புப் பேரரணாக விளங்கிய தமிழீழ விடுதலைப்புலிகளையும், தேசியத் தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களையும் மிகத்தவறாக உலகத்தினருக்குக் காட்ட முற்படும் இத்தகைய இணையத்தொடர் உடனடியாகத் தடைசெய்யப்பட்டு நீக்கப்பட வேண்டுமென்பது தான் தமிழர்களின் விருப்பமாக இருக்கிறது.
இந்திய ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை:
ஈழ விடுதலைப் போராட்டம் குறித்து மிகத் தவறான புரிதலை மற்ற இனங்களிடையே உருவாக்கி, எம்மீனத்தின் விடுதலைப்போரை வன்முறை வெறியாட்டமாகவும், பயங்கரவாதப்போராகவும் காட்ட முனைகிற செயல்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இத்தகைய இணையத்தொடருக்குத் தமிழ்நாடு அரசு தனது கண்டனத்தைப் பதிவுசெய்து, அதற்கு எதிர்ப்பு நிலையினை எடுத்து, தடைசெய்யக்கோரி இந்திய ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறது.
ஆகவே, தமிழர்களையும், தமிழர்களின் வீரம் செறிந்த ஈழ விடுதலைப் போராட்டத்தையும் மிக மிக இழிவாகச் சித்தரித்து, அதனைத் தவறாகக் காட்சிப்படுத்தியிருக்கும், ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடர் ஒளிபரப்பை உடனடியாக நிறுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன். அவ்வாறு செய்யத்தவறி எங்கள் உணர்வுகளை அலட்சியம் செய்து உதறித்தள்ளினால், உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் ஒருங்கிணைந்து, அமேசான் ஃபிரைம் வீடியோ உட்பட அமேசான் நிறுவனத்தின் எல்லாச் சேவைகளையும் தமிழர்கள் அனைவரும் புறக்கணிக்கச் செய்யும் வகையில் மாபெரும் கருத்துப் பரப்புரையைத் தீவிரமாக முன்னெடுப்போம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.