கடந்த 2017ஆம் ஆண்டு பிரபல மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்யப்பட்டார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் உள்ளிட்ட சிலரை கேரள காவல் துறை கைது செய்தது. இந்த வழக்கு விசாரணையில் இதன் பின்னணியில் பிரபல மலையாள நடிகர் திலீப் மூளையாக செயல்பட்டதாகக்கூறி அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து ஜாமினில் அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கில், தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க, நடிகை கடத்தலின் போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ மற்றும் அதனை எடுக்க பயன்படுத்திய ஃபோனையும் தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என திலீப் கேரள உயர் நீதிமன்றத்தை நாடினார். இதனை ஏற்க மறுப்பு தெரிவித்த நீதிமன்றம் திலீப்பின் கோரிக்கையை நிராகரித்தது.
இதை தொடர்ந்து திலீப் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி எ.எம்.கான்வில்கர் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், வீடியோ உள்ளிட்ட ஆதாரங்களைக் கோரியிருந்த திலீப்பின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், வீடியோ ஆதாரங்களை குற்றம்சாட்டப்பட்ட திலீப்பும், அவரது வழக்கறிஞரும் ஆய்வு செய்யலாம் என்று தெரிவித்துள்ளது.