பின்னணி பாடகர், இசையமைப்பாளர் சத்யன் மகாலிங்கம் 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தில் 'கலக்கப்போவது யாரு' என்ற பாடல் மூலம் தமிழ் திரையுலகிற்கு 2004ஆம் ஆண்டு அறிமுகம் ஆனார். அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தில் 'சில் சில் மழையே', 'பாஸ் என்கிற பாஸ்கரன்' திரைப்படத்தில் 'பாஸு பாஸு' போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பாடியுள்ளார்.
விழித்திரு என்ற திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக சத்யன் அவதாரம் எடுத்தார். தற்போது சில தென்னிந்திய மொழி படங்களுக்கு இசை அமைத்து வரும் இவர், கடந்த சில மாதங்களாக முகநூல் நேரலையில் மக்களை மகிழ்விக்க பாடிவந்தார். கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி நடந்த ஒருநாள் மக்கள் ஊரடங்கு அன்று, 14 மணி நேரம் பாடி, வீட்டில் இருந்த மக்களை மகிழ்வித்தார்.
கரோனா பாதிப்பாலும், தொடர் ஊரடங்கினாலும், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மேடை மெல்லிசை கலைஞர்களின் எதிர்காலத்தை எண்ணி வருந்திய சத்யன், அவர்களுக்காக முகநூலில் கடந்த 55 நாள்களாக தினமும் இரவு 7 மணி முதல் பாடி வருகிறார். இதன் மூலம் பல்வேறு நாடுகளிலிருந்து இவருக்கு வரும் உதவித் தொகையை நலிந்த கலைஞர்களுக்கு பகிர்ந்து அளித்துள்ளார்.
55 நாள்களை கடந்த சத்யனின் இந்த நிதி திரட்டும் விடாமுயற்சியின் இறுதிக் கட்டமாக இன்று மாலை 7 மணி முதல், 31ஆம் தேதி மாலை 7 மணி வரை, 24 மணி நேரம் தொடர்ச்சியாக தனது முகநூல் நேரலையில் பாடி மேடை மெல்லிசை கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ முடிவெடுத்துள்ளார். இவரது இந்த முயற்சியை பலரும் பாராட்டிவருகின்றனர்.
இதையும் படிங்க... 'கன்னக் குழியழகே' - சுயாதீனப் பாடலை வெளியிட்ட இயக்குநர் அருண்ராஜா காமராஜ்