வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானவர் சத்யன் மகாலிங்கம். தொடர்ந்து இசையமைப்பாளராக உருவெடுத்தஇவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்சமயம் இவர், ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் இசைக் கலைஞர்களுக்கு உதவும் வகையில், முகநூல் வாயிலாக மூன்று மாதங்களுக்கும் மேலாக தினந்தோறும் பாடல்கள் பாடி வருகிறார்.
அதன்மூலம் வசூலாகும் நன்கொடைகளை, தமிழ்நாட்டில் உள்ள 30 மாவட்ட மேடை மெல்லிசைக் கலைஞர்களை ஒருங்கிணைத்து செயல்படும் தமிழ்நாடு மேடை மெல்லிசைக் கலைஞர்கள் சங்க அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில்நேரடியாக செலுத்தி வருகிறார்.
அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள பல இசைக் கலைஞர்களுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக 1000 ரூபாய் செலுத்தியுள்ளார். இதுவரை மொத்தம் 16 லட்சம் ரூபாய் நிதியுதவியும் செய்துள்ளார்.
இசையமைப்பாளர் சத்யன் மகாலிங்கம் இவை தவிர சென்னையில் உள்ள இசைக் கலைஞர்களின் இரண்டு வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கும், +2 தேர்வில் 85 சதவிகிதம் அதிகமான மதிப்பெண்கள் எடுத்த இசைக் கலைஞர்களின் குழந்தைகளுக்கும் உதவ உள்ளார். அதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், இவரின் இந்த சேவையைப் பாராட்டும் விதமாக, தமிழ்நாடு முழுவதுமுள்ள மேடை மெல்லிசைக் கலைஞர்கள் ஒன்று கூடி முகநூலில் வெளிவரவுள்ள இவரது ’100ஆவது நாள்’ நிகழ்ச்சியினை வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி சிறப்பாகக் கொண்டாட உள்ளனர்.