தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சலீம் இயக்குநரின் ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் சசிகுமார்! பூஜையுடன் ஷூட்டிங் தொடக்கம்! - kalpatru movies

சலீம் படத்தின் மூலம் விஜய் ஆண்டனிக்கு பெரிய ஹிட் கொடுத்த இயக்குநர் நிர்மல் குமார் சசிகுமாரை வைத்து அடுத்து இயக்க இருக்கும் திரைப்படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் இன்று தொடங்கியது.

சசிகுமார்

By

Published : Apr 10, 2019, 11:01 AM IST

Updated : Apr 10, 2019, 2:24 PM IST

'சுப்ரமணியபுரம்' எனும் படத்தின் மூலம் இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகமானவர் சசிகுமார். தமிழ் சினிமாவில் முக்கியமான படங்களில் ஒன்றாகவும், ரசிகர்களால் காலம் கடந்து கொண்டாடப்படும் படமாகவும் 'சுப்ரமணியபுரம்' உள்ளது. அடுத்ததாக அவர் எடுத்த ஈசன் படம், பெரிய அளவில் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. இதனையடுத்து படங்களில் ஹீரோவாக நடித்தும், திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்.

அதன்படி, சசிகுமார் நடிப்பில் வெளியான 'நாடோடிகள்' படம் பெரிய வெற்றியை பெற்றது. அடுத்து 'சுந்தரபாண்டியன்', 'குட்டிப்புலி', 'வெற்றிவேல்', 'கிடாரி' ஆகிய படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாலாவின் ’தாரைதப்பட்டை’ படம் பெரிய தோல்வியை பெற்றது. அதேபோன்று, 'பலே வெள்ளையத்தேவா', 'போராளி', 'அசுரவதம்' படங்களும் எண்ணிக்கையில் மட்டுமே சேர்ந்துகொண்டன.

பேட்ட படத்தில்

சசிகுமார் தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்த வேண்டிய நிலையில் இருக்கும்போது, ’பேட்ட’ படவாய்ப்பு கிடைத்தது. அப்படத்தில் ரஜினி, விஜய் சேதுபதிக்கு பிறகு சசிகுமாரின் நடிப்பு பேசப்பட்டது. மேலும், தனுஷின் அண்ணனாக 'எனை நோக்கி பாயும் தோட்டா', சுசீந்திரன் இயக்கத்தில் பாரதிராஜா உடன் ’கென்னடி கிளப்’, மீண்டும் எஸ்.ஆர்.பிரபாகர் இயக்கத்தில் ’கொம்பு வைச்ச சிங்கமடா’, சமுத்திரகனியுடன் ’நாடோடிகள்-2’ போன்ற படங்களில் தன்னுடைய பாகங்களை நடித்து கொடுத்துவிட்டார்.

இதனையடுத்து ஆக்‌ஷன் த்ரில்லர் கதையம்சம் கொண்ட புதிய படத்தில் நடிக்க சசிகுமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தை 'சலீம்' திரைப்பட இயக்குநர் நிர்மல்குமார் இயக்குகிறார். பிற நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங், பூஜையுடன் இன்று தொடங்கியது. விஜய் ஆண்டனிக்கு பெரிய ஹிட் கொடுத்த நிர்மல்குமாருடன், சசிகுமார் இணைந்திருப்பதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Last Updated : Apr 10, 2019, 2:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details