சார்பட்டா பரம்பரை திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுள்ளது. தமிழில் குத்துச்சண்டை தொடர்பாக வந்த படங்களில் ‘சார்பட்டா பரம்பரை’ தனித்துவமான திரைப்படம். இதை முகமது அலியின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் படமாகவும் பார்க்க முடிகிறது.
‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் தொடக்கத்திலேயே முகமது அலிக்கு நன்றி தெரிவித்து கார்டு போடப்பட்டுள்ளது. 70-களில் வடசென்னை பகுதியில் நடைபெற்று வந்த குத்துச்சண்டை விளையாட்டு குறித்தும், அன்றைய தமிழ்நாட்டு அரசியல் சூழல் குறித்தும் தெளிவான பார்வையை படம் முன் வைக்கிறது.
பா. இரஞ்சித் பேசும் அரசியல் தாண்டி குத்துச்சண்டை தொடர்பாக வந்த படங்களில் ‘சார்பட்டா பரம்பரை’ தமிழ் சினிமாவில் முக்கியமான திரைப்படம். இதன் ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் நிற்கும் அளவுக்கு செதுக்கப்பட்டிருக்கிறது. தனியாக ஒற்றை நபர் படத்தை தாங்கிப் பிடிக்கும் அளவு திரைக்கதை அமைக்கப்படவில்லை. அத்தனை கதாபாத்திரங்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கின்றனர். எனினும் இந்தப் படத்தின் மீதான முகமது அலியின் தாக்கம் குறித்து இத்தொகுப்பில் காணலாம்.
வாத்தியார்கள்:
பசுபதி - ரங்கன் வாத்தியார்
ரங்கன் எனும் குத்துச்சண்டை பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் பசுபதி கலக்கியிருக்கிறார். விருமாண்டி, வெயில் படத்தில் வந்த அவரது கதாபாத்திரம் போல இந்தக் கதாபாத்திரமும் காலம் கடந்து பேசப்படும்.
ஜிஎம் சுந்தர் - துரைக்கண்ணு வாத்தியார்
நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘காதலும் கடந்துபோகும்’ படத்தின் மூலமாக நடிக்க வந்தார் ஜிஎம் சுந்தர். அதன்பிறகு சீதக்காதி, மகாமுனி என சில படங்களில் நடித்திருந்தாலும், அவருக்கும் இத்திரைப்படம் முக்கியமான திரைப்படமாக இருக்கும்.
கபிலன், டான்ஸிங் ரோஸ், வேம்புலி:
இந்த மூன்று கதாபாத்திரங்களும் முகமது அலியின் தாக்கத்தால் உருவான கதாபாத்திரங்களாகவே பார்க்க முடிகிறது. முகமது அலியின் குத்துச்சண்டை யுக்திகளை இந்த கதாபாத்திரங்கள் பிரதிபலிக்கின்றனர்.
கபிலனாக ஆர்யா கலக்கியிருந்தாலும். டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஷபீர் பலரையும் கவர்ந்துள்ளார். டான்ஸிங் ரோஸை அறிமுகப்படுத்தும் விதம் பார்வையாளர்களை மிரளச் செய்கிறது.
வேம்புலி கதாபாத்திரத்தில் ஜான் கோக்கன் சிறப்பாக நடித்துள்ளார். இந்தப் படத்துக்காக அவரும் உடலை ஏத்தியிருக்கிறார்.
கபிலன் என்ற மைய கதாபாத்திரத்தின் பயணத்தை முகமது அலியோடு ஒப்பிட்டு பார்க்க முடிகிறது. சுகர் ரே ராபின்சன் என்பவரால் ஈர்க்கப்பட்டு குத்துச்சண்டை வீரராக மாறியவர் முகமது அலி. அதேபோல் ரங்கன் வாத்தியாரின் குத்துச்சண்டையை பார்த்து உத்வேகம் அடைகிறது கபிலன் கதாபாத்திரம்.
வியட்நாம் போருக்கு செல்ல மறுத்ததால், சிறை தண்டனையை அனுபவித்தார் முகமது அலி. தன்னை அவமானப்படுத்தியவனை வெட்டிவிட்டு சிறைக்கு செல்கிறது கபிலன் கதாபாத்திரம்.
சிறையில் இருந்து வெளிவந்த முகமது அலி, தன்னை மீட்டெடுக்க சிரமப்பட்டது போலவே கபிலன் கதாபாத்திரம் தன்னை மீண்டும் ஒரு குத்துச்சண்டை வீரனாக நிலைநிறுத்திக்கொள்ள போராடுகிறது.
ஒரு புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரரோடு போட்டியிடும் முன்பு, ரெண்டு ரவுண்டில் அவரை முடித்துவிடுவேன் என பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்துவிட்டு போனார் முகமது அலி. பத்திரிகையாளர்கள் சிரித்தனர்; சொன்னதைச் செய்துவிட்டு பத்திரிகையாளர்களை பார்த்து முகமது அலி சிரித்தார். இதேபோல் டான்சிங் ரோஸை அடிக்கும் முன்பு கபிலன் கதாபாத்திரம் சவால் விடுகிறது.
கவனம் ஈர்த்த கெவின் எனும் டாடி:
சார்பட்டா பரம்பரை படத்தில் கெவின் (டாடி) எனும் ஆங்கிலோ இந்தியன் கதாபாத்திரத்தில் ஜான் விஜய் நடித்திருக்கிறார். ஜான் விஜய் வழக்கம்போல சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தக் கதாபாத்திரம் மீதும் முகமது அலியின் தாக்கம் இருக்கிறது. முகமது அலி சரியான நக்கல் பிடித்தவர்; அதே தொனியில் இருக்கிறது டாடி கதாபாத்திரம். இப்படி படம் நெடுக முகமது அலி ரெஃபரன்ஸ் ஏராளம்.
‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் எந்த அளவு முகமது அலியின் தாக்கம் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள I am ali, The trials of muhammed ali போன்ற ஆவணப் படங்கள் உதவியாக இருக்கும். முகமது அலியை மிகவும் நேசித்ததன் விளைவாக ‘சார்பட்டா பரம்பரை’ படத்தை கொடுத்திருக்கிறார் பா. இரஞ்சித்.
இதையும் படிங்க:'சூர்யா 39' அப்டேட்: 'ஜெய்பீம்' வக்கீலாக தோன்றும் சூர்யா