மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், 'கேதார்நாத்'. அபிஷேக் கபூர் இயக்கிய இப்படம் மூலம் சாரா அலிகான் நாயகியாக அறிமுகமாகினார்.
கேதார்நாத் திரைப்படம் கோயில் தலமான உத்தரகாண்டில் படமாக்கப்பட்டது. சாரா அலிகான் இந்து சமயத்தைச் சேர்ந்த பெண்ணாகவும், சுஷாந்த் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவராகவும் நடித்திருந்தனர். இவர்களுக்குள் எப்படி காதல் வந்தது, இறுதியில் இவர்களின் காதல் வெற்றிபெற்றதா என்பதே படத்தின் கதையாகும்.
இந்நிலையில் 'கேதார்நாத்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் (டிசம்பர் 7) மூன்று ஆண்டுகள் நிறைவடைகிறது. இது குறித்து சாரா கூறுகையில், "இயக்குநரிடமிருந்து கேமரா முன்பு எப்படி நடிக்க வேண்டும் எனக் கற்றுக்கொண்டேன். என்னுடன் நடித்த மற்ற நடிகர்களிலேயே மிகவும் சிறந்த துணை நடிகராக சுஷாந்த் சிங்கைதான் பார்க்கிறேன்.
புதிய இடம், பதற்றமாக இருந்தபோது என்னைச் சிறந்த முறையில் இயக்குநரும், சுஷாந்த் சிங்கும் வழி நடத்தினர். கேதார்நாத் எப்போதும் எனக்குச் சிறப்பான படமாக இருக்கும். இந்தப் படத்தில் நான் நடித்த முதல் ஷாட் இன்னும் ஞாபகம் இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'சூப்பர் ஸ்டாருக்கு அப்புறம் சிம்புதான்...'; நடிகர் அஸ்வின் உருக்கம்!