இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இரண்டாம் குத்து’. அடல்ட், த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இதில் அக்ரிதி சிங், டேனியல், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டரும் டீஸரும் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின.
அதன்ஒரு பகுதியாக இயக்குநர் பாரதிராஜா, ‘இரண்டாம் குத்து’ படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசிகிறது. இத்தமிழ் நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும்?” என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இயக்குநர் பாரதிராஜா இயக்கிய, டிக் டிக் டிக் படத்தை பார்த்தால் கூசாத கண்கள், இப்போ மட்டும் கூசிவிட்டதா?” என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இதற்கு மன்னிப்பு கேட்டு இயக்குநர், சந்தோஷ் பி. ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “இரண்டாம் குத்து படத்தை இயக்கி நடித்துள்ளேன். அதன் போஸ்டர்கள், டிஸருக்கு இயக்குநர் பாரதிராஜா எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையை படித்துவிட்டு வந்த கனத்தின் வெப்பத்தில், எனது ட்விட்டர் பதிவில் ஒரு ட்வீட் போட்டுவிட்டேன். அது அவசரத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்தது. அதற்குப் பிறகு நாம் அவசரத்தில் இதை செய்திருக்கக் கூடாது என்று மனம் கூறியது. ஆகவே, நான் போட்ட ட்வீட்டிற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.
தமிழ்த் திரையுலகின் மூத்த இயக்குநர் பாரதிராஜா. அவருடைய சாதனையில் 1 சதவீதமாவது நாம் செய்துவிட மாட்டோமா என்று பலரும் பணிபுரிந்து வருகிறார்கள். பல்வேறு இயக்குநர்களுக்கு இயக்குநர் பாரதிராஜா அவர்கள் வழிகாட்டியாக இருந்திருக்கிறார், இருக்கிறார், எப்போதும் இருப்பார். அவருடைய அறிக்கைக்கு நான் அவ்வாறு எதிர்வினையாற்றி இருக்கக்கூடாது. இதற்கு அடுத்து வரும் போஸ்டர்கள், அனைத்து தரப்பு மக்களும் பார்க்கும் வகையில் இருக்கும் என்று உறுதியளிக்கிறேன். நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:அமிதாப் பிறந்தநாள்- மணல் சிற்பத்தை வடிவமைத்து அசத்திய மணல் சிற்பக் கலைஞர்