தடகள வீராங்கனை சாந்தி சௌந்தரராஜனின் வாழ்க்கை வரலாறு சினிமா திரைப்படமாகிறது. 888 புரொடக்ஷன்ஸ் முதல் தயாரிப்பான இப்படத்தை, எழுதி இயக்குபவர் ஜெயசீலன் தவப்புதல்வி. திரைப்படத்திற்கு 'சாந்தி செளந்தரராஜன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதுவரை பல படங்களை விநியோகம் செய்துவரும் 888 Productions நிறுவனம் முதன் முறையாக தயாரிப்புத் துறையில் தடம்பதிக்கிறது. கடந்தாண்டு மம்மூட்டி நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற 'மாமாங்கம்' திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய மனோஜ் பிள்ளையிடம் அசோஸியேட் ஒளிப்பதிவாளராகவும், பல படங்களில் இணை, துணை ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றிய ஜெயசீலன் தவப்புதல்வி இந்தப் படத்தின் மூலம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.
இந்தியாவிற்கு 12 சர்வதேச பதக்கங்களையும், தன் சொந்த மாநிலமான தமிழ்நாட்டிற்கு 50 பதக்கங்களுக்கு மேல் வென்ற தடகள வீராங்கனை சாந்தி செளந்தரராஜன். ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ் பெண் சாந்தி செளந்தரராஜன். 2006 ஆசிய விளையாட்டுப் போட்டியில் நடத்தப்பட்ட பாலின சோதனையின் அறிக்கையின் அடிப்படையில், பெண்களுக்கான போட்டியில் தகுதி மறுக்கப்பட்டு அவர் வென்ற வெள்ளிப் பதக்கம் அவரிடமிருந்து திரும்பப் பெறப்பட்டது.
இந்த அவமானகரமான சோதனையின் காரணமாக சாந்தி செளந்தரராஜன் தடகளப் போட்டிகளிலிருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டார். அவர் வாழ்க்கையில் நடந்த, இதுவரை வெளிவராத பல சுவாரஸ்யமான சம்பவங்கள், திருப்பங்களுடன் கதை வடிவமைக்கப்பட்டு, முழுக் கதையினையும் சாந்தி செளந்தரராஜனிடம் ஒப்புதல் பெற்று, இக்கதை படமாக்கப்பட உள்ளது.