தமிழ்நாட்டு கோயில்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும் என, ஈஷா யோகா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக, இன்று(பிப்.27) சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில், "11,999 கோயில்களில் ஒரு கால பூஜைகூட நிகழாமல் அழிந்து வருகின்றன.
34,000 கோயில்கள் 10,000க்கும் குறைவான வருட வருவாயுடன் போராடுகின்றன. 37,000 கோயில்களில் பூஜை, பராமரிப்பு, பாதுகாப்பிற்கு ஒருவர் மட்டுமே உள்ளார். கோயில்களைப் பக்தர்களிடம் விடுங்கள். தமிழ்நாட்டு கோயில்களை விடுவிக்கும் நேரமிது.
கிழக்கிந்திய கம்பெனி, நம் நாட்டு செல்வத்தைத் திருடியதோடு, கோயில்களை கையகப்படுத்தியதால் நம் ஆன்மீகத்தையும் அடக்கி ஒடுக்கினர். அரசாங்கம் கோயில்களை நிர்வகிக்க வேண்டுமென்றால், அவர்கள் தாங்கள் செய்வது மக்களாட்சி அல்ல, இறையாட்சி" என அறிவிக்க வேண்டும் எனக் கூறி வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வேகமாகப் பரவியது. மேலும் நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நகைச்சுவை நடிகர் சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில், "சத்குருவின் கருத்துக்கு நான் உடன்படுகிறேன். பல கோயில்களில் எந்த பூஜையும் நடக்காமல் இருப்பதைப் பார்ப்பதற்கு வருத்தமாகவுள்ளது. அங்கு போதுமான அளவில் பாதுகாப்பு, பராமரிப்பு செய்யப்படவில்லை. கோயிலை நிர்வகிக்கும் பொறுப்பை பக்தர்களுக்கே கொடுத்துவிடுங்கள்" என, சத்குருவின் வீடியோவிற்கு சந்தானம் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: விஜய் சேதுபதியை மிஞ்சும் சந்தானம்!