சென்னை: திட்டமிட்டபடி ஜனவரி 31ஆம் தேதி சந்தானம் நடித்துள்ள 'டகால்டி' படம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்தப் படத்தில் சந்தானம் கதாநாயகனாகவும், வங்காள மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாகத் திகழும் ரித்திகா சென் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். யோகி பாபு, தெலுங்கு பட காமெடியன் பிரம்மானந்தம், தருண் அரோரா, ஹேமந்த் பாண்டே பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
Santhanam and Yogi babu in Dagaalty நடிகர்கள் ராதாரவி, ரேகா, மனோபாலா, சந்தானபாரதி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள், தமிழ், தெலுங்கு, வங்காளம், இந்தி என நான்கு மொழி நட்சத்திரங்களும் நடித்துள்ள இந்தப் படம் தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் என நான்கு மாநிலங்களில் ஏராளமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
Santhanam in Dagaalty movie பிரமாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றிய விஜய் ஆனந்த், 'டகால்டி' படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.
சந்தானமும், யோகி பாபுவும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளதால், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் வரும் 31ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
Santhanam working still in Dagaalty சந்தானம் நடித்து நீண்ட நாள் ரிலீஸாகாமல் தள்ளிப்போன 'சர்வர் சுந்தரம்' படமும் இதே தேதியில் ரிலீஸாகவுள்ளது. ஒரு நடிகரின் இரண்டு படங்கள் ஒரே தேதியில் ரிலீஸ் ஆக கூடாது என்ற பிரச்னை எழுந்து வந்த நிலையில், திட்டமிட்டபடி டகால்டி படத்தை சொன்ன தேதியில் வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இதில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்தப் படத்தை 18 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் திருப்பூர் விநியோகஸ்தர் எஸ்.பி.செளத்ரி தயாரித்துள்ளார்.