சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சூரரைப் போற்று'. இதில் அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, காளிவெங்கட், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஏர் டெக்கான் என்ற பெயரில் குறைந்த கட்டணத்திலான விமான சேவையை தொடங்கிய கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் அவரது வாழ்க்கையில் எதிர்கொண்ட போராட்டங்களை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டுள்ளது.
அமேசன் பிரைமில் தீபாவளி வெளியீடாக இன்று (நவ. 12) வெளியாகியுள்ளது. ஓடிடி தளத்தில் படத்தை பார்த்த ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில், பிரபல தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ் கூறியிருப்பதாவது:
'சூரரைப் போற்று' எல்லாத் துறைகளிலும் உயரே பறந்து கொண்டிருக்கிறது. கோபக்கார இளைஞனாக ஆர்வமிகு இளம் தொழிலதிபராக அன்பான கணவனாக என அனைத்துக் காட்சியிலும் சூர்யா சிறப்பாக நடித்துள்ளார். அபர்ணா பாலமுரளி தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தான் வரும் ஒவ்வொரு ஃபிரேமிலும் தனது முத்திரையை பதிக்கிறார்.
ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை படம் முழுவதும் அற்புதமான தாக்கத்தை ஏற்படுத்துக்கிறது. நிகேத் பிரேம்கள் ஓவியங்களாக இருக்கிறது. கலை இயக்குநர் ஜாக்கி, எடிட்டர் சதீஷ் சூர்யா நிச்சயமாக உயரங்களை தொடுவார்கள்.
ஊர்வசி அற்புதமாக நடித்துள்ளார். அவர் தான் தோன்றும் காட்சிகளைத் தன் தோளில் சிரமமின்றி சுமந்து நம் கவனத்தை ஈர்க்கிறார். இது சூரரைப் போற்று அல்ல, சூர்யாவின் போற்று! அவர் மாறாவாகவே வாழ்ந்துள்ளார்.
இந்த வருடம் உங்களுக்காக தேசிய விருது காத்திருக்கிறது. இல்லையென்றால் நான் அதற்காகப் போராடுவேன். இறுதியாக சுதா கொங்கரா தொலைநோக்குப் பார்வை கொண்ட பெண். இந்தப் படைப்பின் மூலம் உச்சபட்ச நேர்த்தியைச் சம்பாதித்துள்ளீர்கள் சல்யூட் என ஒட்டு மொத்த படக்குழுவினரையும் புகழராம் சூட்டியுள்ளார்.