நீட் தேர்வு அச்சம் காரணமாகத் தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். மாணவர்கள் தற்கொலை எண்ணத்தைக் கைவிட வேண்டும் என்று பலரும் வலியுறுத்திவருகின்றனர்.
அந்தவகையில் நடிகை சாய் பல்லவி, நீட் தேர்வு அச்சம் காரணமாகத் தற்கொலை செய்துகொள்பவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில், "நீட் தேர்வு என்பது கடல் அலை போன்றது. அதில் எந்தக் கேள்வி கேட்பார்கள் என்பது யாருக்கும் தெரியாத ஒன்று. அதனால் நீட் தேர்வு குறித்து அச்சம் இயல்பாக வரும்.
என் குடும்பத்திலும் நீட் தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் தற்கொலை நடந்திருக்கிறது. அதுவும் மோசமான மதிப்பெண்கூட அது கிடையாது. ஒருவர் தற்கொலை செய்துகொள்வது, அவர்களது குடும்பத்தைச் சோகத்தில் தள்ளும் என்பதை உணர வேண்டும்.
நான் எளிதாக ஒருவரிடம் தற்கொலை செய்து கொள்ளாதீர்கள் என்று சொல்லிவிடலாம். ஆனால் உண்மையில் அவர்கள் இருக்கும் மனநிலைமைதான் அனைத்தையும் தீர்மானிக்கும். நாம் நன்றாகத் தேர்வு எழுதியுள்ளோம் என்றுதான் நினைப்போம். ஆனால் அதற்கு மாறாக மதிப்பெண் வந்தால் அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அவர்களை நண்பர்களும், குடும்பத்தினரும் பேசிதான் நம்பிக்கை வரவைக்க வேண்டும். 18 வயது ஆகாத மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது வேதனை அளிக்கிறது. எத்தனை பிரச்சினை வந்தாலும் நான் மாணவர்கள் பக்கம்தான் நிற்பேன் " எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:காதலனுடன் நயன்தாரா திருப்பதியில் சாமி தரிசனம்