ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் திரைப்படம் 'ஆர்ஆர்ஆர்' (ரத்தம் ரணம் ரௌத்திரம்). ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆருடன் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தற்போது இந்தப் படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.
சுதந்திரப் போராட்ட வீரர்கள் அல்லூரி சீதாராம ராஜு, குமரம் பீம் ஆகிய இருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தின் முக்கிய கதாநாயகர்களான ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் ஆகியோரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படம் குறித்தான எதிர்பார்ப்பை அதிகரித்தது.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. அதுமட்டுமல்லாது ஆங்கிலம், போர்த்துகீசியா, கொரியா, துருக்கி, ஸ்பானிஷ் என உலக மொழிகளிலும் வெளியாகிறது. இந்தப் படத்தின் தமிழ்நாடு உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது.