தனுஷ், சாய் பல்லவி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் 'மாரி 2'. இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற 'ரௌடி பேபி' என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. பிரபு தேவா நடன அமைப்பும் - யுவன் இசையும் சேர்ந்து இந்தப் பாடலை மாபெரும் ஹிட்டாக்கியது.
இந்தப் பாடல் யூடியூப்பில் வெளியான 24 மணி நேரத்துக்குள் இதை 70 லட்சம் பேர் பார்த்தனர். சமூகவலைதளத்தில் இப்பாடல் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது. அந்தவகையில் தற்போது யூ- டியூப்பில் இந்தப் பாடல் 1 பில்லியன் (100 கோடி) பேர் பார்த்த முதல் தென்னிந்திய பாடல் என்ற சாதனையை படைத்துள்ளது.
அதுமட்டுமல்லாது தனுஷ் பாடிய 'கொலை வெறி' பாடலும் 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி யூ- டியூப்பில் வெளியாகி இன்றுடன் 9 வருடங்கள் ஆகிறது.
இதனையடுத்து தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “என்ன ஒரு ஒற்றுமை 'கொலை வெறி' பாடல் வெளியான 9ஆம் ஆண்டு தினத்தில் 'ரெளடி பேபி' பாடல் 1 பில்லியன் சாதனையைப் படைத்துள்ளது. தென்னிந்திய அளவில் முதல் முறையாக 1 பில்லியன் சாதனை படைத்திருப்பதை நாங்கள் கெளரவமாக நினைக்கிறோம். எங்கள் மொத்த குழுவும் எங்கள் இதயத்திலிருந்து உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்“ எனப் பதிவிட்டுள்ளார்.
அதே போல் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “1 பில்லியன் பேர் ரெளவுடி பேபி பாடலை பார்த்த புதிய மைல்கல்லை படைத்துள்ளது. இது எனக்கு எனது ரசிகர்கள் தந்த இனிமையான ஒரு ஆச்சர்யமாக இருக்கிறது. அனைவருக்கும் நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து ரசிகர்கள் #RowdyBabyHits1BillionViews என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்து சமூகவலைதளத்தில் கொண்டாடி வருகின்றனர்.