கில் பில், இன்க்ளோரியஸ் பாஸ்டர்ட்ஸ், ட்ஜேங்கோ அன்செய்ண்ட் உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்தவர் பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வே வெய்ன்ஸ்டீன்.
67 வயதான ஹார்வே வெய்ன்ஸ்டீன் மீது ஜெஸிகா மேன், மிரிரம் ஹாலே உள்ளிட்ட நடிகைகள் அமெரிக்காவின் முதல், மூன்றாம் டிகிரி பாலியல் குற்றங்களான கட்டாயப் பாலியல் வன்புணர்வு புகார்களைத் தெரிவித்திருந்த நிலையில், நியூயார்க்கின் மேன்ஹேட்டன் நீதிமன்றம் வெய்ன்ஸ்டீனை தண்டனை குற்றவாளியாக அறிவித்து நேற்று தீர்ப்பளித்தது.
உலகம் முழுவதும் மீ டூ இயக்கத்தின் மூலம் பல பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ள நிலையில், மேன்ஹேட்டன் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது.
இந்தத் தீர்ப்பையடுத்து வெய்ன்ஸ்டீன் மீது ஆரம்பகாலத்திலேயே குற்றம் தெரிவித்தவர்களில் ஒருவரான நடிகை ரோசானா, ”துணிந்து முன்வந்து புகார் தெரிவித்த பெண்களுக்கு நன்றி. வருங்காலங்களில் பெண்கள் துணிந்து முன்வந்து பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைக்க வழிவகை செய்யுமாறு சட்டத்தையும் இனி எளிமைப்படுத்த முயற்சிப்போம்” என ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, நடிகை ஆஷி ஜூட் இந்த வழக்கில் சாட்சியளித்த பெண் பெரும் துயருக்கு ஆளாகியுள்ளார் என்றும் சாட்சியளித்துள்ள பெண் அனைத்து பெண்களுக்கும் பொதுச்சேவை ஆற்றியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை ரோஸ் மெக் கோவ்ன் இன்றைய நாள் ஒரு சக்திவாய்ந்த நாள் என்றும் அனைவரின் துயரையும் போக்கும்விதமாகவும் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற பிரபல தயாரிப்பாளர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி!