ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப்படை வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
பயங்கரவாதிகளின் இந்த தாக்குதல் சம்பவம் இந்திய நாட்டையே உறையவைத்துள்ளது. பாகிஸ்தான் ஆதரவோடு செயல்பட்டு வருவதாக கூறப்படும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் பொறுப்பேற்றுள்ள இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், இத்தாக்குதலுக்கு பின்னணியில் இருப்பவர்கள் நிச்சயம் பெரும் விலை கொடுப்பார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே உயிரிழந்த வீரர்களின் உடல்கள் அவரவர் உறவினர்களிடம் ஒப்படைகத்து நல்லடக்கம் செய்யப்பட்டது.
தமிழகத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் சிவசந்திரன் ஆகியோர் உடல்கள் தமிழகம் வந்தன. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் அறிவித்துள்ளது. மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த அனைத்து வீரர்களின் குடும்பத்துக்கும் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது. ஆந்திராவின் இந்த முடிவுக்கு பலர் வரவேற்பளித்துள்ளனர்.
இதை தொடர்ந்து காமெடி நடிகர் ரோபோ சங்கர் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக இராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு ஒரு இலட்சம் நிதியுதவி வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் இராணுவப் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
“காஷ்மீர் புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தீவிரவாத தாக்குதலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறது . இந்த தாக்குதலில் நம் தேசம் காக்க காவல் புரிந்து வந்த ராணுவ வீரர்கள் பலியாகியது நெஞ்சை உறைய வைத்துள்ளது.
வீரமரணமடைந்த வீரர்களுக்கு வீர வணக்கத்தோடு கண்ணீர் அஞ்சலி செலுத்தி அவர்களது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறோம்.
இந்த தாக்குதலுக்கு அரசு எந்த வகையில் பதில் அளித்தாலும், அதற்கு ஒட்டுமொத்த நாட்டுடன் நடிகர் சமூகமும் தென்னிந்திய நடிகர் சங்கமும் ஒற்றுமையுடன் ஆதரவளிக்கும் என்பதை தேச பக்தியோடு தெரிவித்து கொள்கிறோம் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.