டி சி காமிக்ஸ் கதாபாத்திரங்களில் ரசிகர்கள் பலரும் விரும்பும் பாத்திரமாக இருப்பது ’பேட் மேன்’. இன்று வரை பேட் மேன் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு கூடிக்கொண்டேதான் செல்கிறது.
கோத்தம் நகரத்தை தீய சக்திகளிடமிருந்து பாதுகாத்து, தனது அடையாளத்தையும் வெளியுலத்திடமிருந்து மறைத்து, பேட் மேனாக விளங்கும் புரூஸ் வெய்ன் பாத்திரம் வாழ்ந்து வரும். இதுவரை பேட் மேன் திரைப்படங்களை டிம் பர்டன், ஜோயல் ஸ்குமேச்சர், கிறிஸ்டோபர் நோலன் போன்ற பல இயக்குநர்கள் கையில் எடுத்து ஹேட்ரிக் ஹிட் கொடுத்துள்ளனர்.
மைகல் கியட்டன், கிறிஸ்டின் பேல் போன்ற நடிகர்கள் பேட் மேன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளனர். இந்நிலையில் அண்மையில் 'த பேட் மேன்' திரைப்படத்தின் டீஸர் ட்ரெய்லர், டிசி ஃபேன்டம் ஆன்லைன் நிகழ்ச்சியில் வெளியானது. மேட் ரீவ்ஸ் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில் 'டிவைலைட்', 'டெனட்' போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள ராபர்ட் பேட்டின்சன் பேட் மேனாக நடித்திருக்கிறார்.
இதுவரை வந்த 'பேட் மேன்' திரைப்படங்களிலேயே கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ’டார்க் நைட்’ திரைப்படம் தான் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து தற்போது மேட் ரீவ்ஸ் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தின் டீஸர் ட்ரைலர், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கண்ணாபின்னாவென எகிர வைத்துள்ளது.