மீண்டும் படப்பிடிப்பிற்கு திரும்பிய 'தி பேட்மேன்' ராபர்ட் பேட்டின்சன் - ராபர்ட் பட்டின்சன் படங்கள்
லண்டன்: நடிகர் ராபர்ட் பேட்டின்சன் கோவிட் -19 நோய்த் தொற்றில் இருந்து மீண்டு 'தி பேட்மேன்' படப்பிடிப்பிற்கு மீண்டும் திரும்பியுள்ளார்.
டி. சி. காமிக்ஸ் கதாபாத்திரங்களில் ரசிகர்கள் பலரும் விரும்பும் பாத்திரமாக இருப்பது ’பேட்மேன்’. இன்று வரை பேட்மேன் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு கூடிக்கொண்டேதான் செல்கிறது.
கோத்தம் நகரத்தை தீய சக்திகளிடமிருந்து பாதுகாத்து, தனது அடையாளத்தையும் வெளியுலத்திடமிருந்து மறைத்து, பேட்மேனாக விளங்குவதாக புரூஸ் வெய்ன் பாத்திரம் வாழ்ந்து வரும். இதுவரை பேட் மேன் திரைப்படங்களை டிம் பர்டன், ஜோயல் ஸ்குமேச்சர், கிறிஸ்டோபர் நோலன் போன்ற பல இயக்குநர்கள் கையில் எடுத்து ஹாட்ரிக் ஹிட் கொடுத்துள்ளனர்.
மைகல் கியட்டன், கிறிஸ்டின் பேல் போன்ற நடிகர்கள் பேட் மேன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளனர்.
'தி ட்விலைட் சாகா' திரைப்படம் மூலம் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் ராபர்ட் பேட்டின்சன்.
தற்போது, இயக்குநர் மேட் ரீவ்ஸ் இயக்கத்தில் வார்னர் பிராஸ் தயாரிக்கும் 'தி பேட்மேன்' திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார்.
இப்படத்தின் ட்ரெய்லரும் சமீபத்தில் நடைபெற்ற ’டிசி ஃபேன் டோம்’ நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டு ரசிகர்ளிடம் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், ராபர்ட் பேட்டின்சனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் தகவல்கள் வெளியானது. இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது. இரண்டு வார காலம் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதனையடுத்து ராபர்ட் பேட்டின்சன் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். கரோனா நோய்தொற்றுக்குப்பின் அவர் கலந்துகொண்ட முதல் நாள் படப்பிடிப்பு என்று தயாரிப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. திரைப்படத்தின் வெளியீடு ஜூன் 2021-லிருந்து அக்டோபர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.