தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வாழ்வின் மிக எளிய தருணங்களை அழகான தத்துவத்துடன் கூறும் படம் 'கூழாங்கல்' - தமிழ் கூழாங்கல் திரைப்படம்

நயன்தாரா - விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்த 'கூழாங்கல்' திரைப்படம் மிகச்சிறந்த திரைப்படம் என, அமெரிக்க திரைப்பட விமர்சகர் ரிச்சர்ட் ப்ராடி பாராட்டியுள்ளார்.

pebbles
pebbles

By

Published : Apr 29, 2021, 8:15 PM IST

அறிமுக இயக்குநர் வினோத்ராஜ் இயக்கத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கும் முதல் படம் 'கூழாங்கல்'. இன்னும் திரைக்கு வராத இந்தப்படம் உலகின் பல்வேறு திரைப்பட விழாவில் கலந்துக்கொண்டு வெற்றிப்பெற்றது.

ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் உயரிய விருதான ‘டைகர்’ விருதினை வென்றிருருக்கும் இத்திரைப்படம், தற்போது நியூயார்க் நகரில் நடைபெறும் முக்கியமான “New Directors New Films” திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.

“New Directors New Films” தனது 50வது விழாவை இவ்வருடம் கொண்டாடி வரும் நிலையில், உலகின் மிக முக்கியமான திரை விமர்சகர்களில் ஒருவராகக் கருத்தப்படும் ரிச்சர்ட் ப்ராடி இந்த வருடத்தின் “New Directors New Films” விழாவில் மிகச்சிறந்த திரைப்படம் “கூழாங்கல்” என பாரட்டியுள்ளார்.

அமெரிக்காவின் பிரபல நியூயார்க்கர் பத்திரிக்கையில், 20 வருடங்களுக்கும் மேலாக சினிமா விமர்சனம் எழுதி வருபவர் ரிச்சர்ட் ப்ராடி. மேலும் திரைப்படங்கள் குறித்து பல ஆய்வு கட்டுரைகளும், புத்தகங்களும் எழுதியுள்ளவர்.

சினிமா குறித்த ஆழ்ந்த புரிதலும் அனுபவமும் கொண்ட இவர், ஆசான் கொடார்ட்டிடம் நடத்திய உரையாடல்கள் வழியாக 'Everything is cinema : the working life of Jean-Luc Godard' என்ற முக்கியமான புத்தகத்தையும் எழுதியுள்ளார்.

மேலும் 2012-ஆம் ஆண்டு உலகின் மிக முக்கியமான வாக்கெடுப்பாகக் கருதப்படும் Sight & Sound விமர்சகர்களின் வாக்கெடுப்புக் குழுவிலும் பங்கேற்றுள்ளார். உலகின் மிகவும் மதிப்பு மிகுந்த திரைப்பட விமர்சகர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர் ரிச்சர்ட் ப்ராடி.

அவரது அற்புதமான எழுத்து நடை சினிமா செல்லும் அனுபவத்திற்கு இணையானது என சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இவர் சமீபத்தில் நியூயார்க்கர் இணையதளத்தில் “கூழாங்கல்” படம் குறித்து மிக நீண்ட ஒரு விமர்சனக் கட்டுரையினை எழுதியுள்ளார்.

அந்த கட்டுரையில், " வாழ்வின் மிக எளிய தருணங்களை அழகான தத்துவத்துடன் கூறும் படம். இயக்குநர் P.S.வினோத்ராஜ் மிக சிறந்த படைப்பாளி, வாழ்வின் மிக எளிய தருணங்களை திரையில் தத்ரூபமாகக் கொண்டுவந்துள்ளார்.

9 நிமிடங்கள் நீளும் ஒரு ஷாட் மிக அற்புதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் முடிவு சமீபத்திய சினிமாக்களில் மனதை விட்டு நீங்காதது" என படம் குறித்து புகழ்ந்து பாராட்டியுள்ளார். உலகம் முழுக்க முக்கிய திரை ஆளுமைகளிடம் இருந்து தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்து வருவதில் கூழாங்கல் படக்குழு பெரும் உற்சாகத்தில் உள்ளது.

இப்பாராட்டு குறித்து இயக்குநர் வினோத்ராஜ் கூறியதாவது, "ரிச்சர்ட் ப்ராடி அவர்களின் இவ்விமர்சனம் எங்கள் குழுவிற்கு கிடைத்த மிக முக்கியமான அங்கீகாரம். டைகர் விருதின் மூலம் எப்படி உலகிற்கு நமது கூழாங்கல் அறிமுகமானதோ, அதோ போல விமர்சகர் ரிச்சர்ட் பிராடியின் வார்த்தைகளும், நியூயார்க்கரில் வெளியான விமர்சனக் கட்டுரையும் 'கூழாங்கல்' திரைப்படத்தை உலகம் முழுவதுமுள்ள திரைப் படைப்பாளிகள் மத்தியிலும், சினிமா ஆர்வலர்கள் மத்தியிலும் கொண்டு செல்லும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

இன்னும் பல திரைப்பட விழாவில் பங்குபெற்ற பின்னர் திரைக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details