ராம் கோபால் வர்மாவின் புதிய தயாரிப்பு 'திஷா என்கவுன்ட்டர்' - திஷா என்கவுண்டர் வழக்கு
'திஷா என்கவுன்ட்டர்' சம்பவத்தை மையமாக வைத்து இயக்குநர் ராம்கோபால் வர்மா திரைப்படம் ஒன்றை தயாரித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் தேதி திஷா என்னும் கால்நடை மருத்துவர் நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் லாரி ஓட்டுநர்கள் இருவர், கிளீனர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரணை செய்துவந்த காவல் துறையினர், குற்ற நிகழ்விடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையின்போது அவர்கள் நான்கு பேரும் தப்பியோட முயற்சித்தனர். அவர்களைத் தடுக்கும் முயற்சியில் கால் துறையினர் ஈடுபட்டு துப்பாக்கி முனையில் தடுத்தனர். அதையும் மீறி தப்பியோடிய அவர்கள் நான்கு பேரையும் டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.
தற்போது இந்த நிகழ்வு குறித்து ராம் கோபால் வர்மா 'திஷா என்கவுன்ட்டர்' என்ற பெயரில் ஆனந்து சந்திரா இயக்கிய திரைப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் நாளை(செப்டம்பர் 26) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது முடக்கத்தால் சினிமா படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், ராம் கோபால் வர்மா இந்த ஊரடங்கு காலத்தில் அதிகப் படங்களை இயக்கியும் தயாரித்தும் தனது சொந்த செயலி தளங்களான 'RGV World', SheryasET'யில் வெளியிட்டு வருகிறார்.