மும்பை (மகாராஷ்டிரா): பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் இழப்பில் இந்தியா தத்தளித்துக் கொண்டிருக்கையில், இசைத் துறையின் மற்றொரு தூணான எவர்கிரீன் டிஸ்கோ கிங் பப்பி லஹிரியின் இழப்பு இந்தியர்களை மேலும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. இவர் நேற்றிரவு (பிப்ரவரி 15) தூக்கத்திலேயே மூச்சுத்திணறல் ஏற்பட்டு காலமானார். இவருக்கு வயது 69.
இவரது இயற்பெயர் அலோகேஷ் லஹிரி. அபரேஷ் லஹிரி - பன்சுரி லஹிரி என்னும் இரு வங்காள பாடகர்களுக்கு மகனாகப் பிறந்தவர். பெற்றோர் இருவரும் பாரம்பரிய இசை, ஷியாமா சங்கீதத்தில் கலைஞர்களாக இருந்ததால், பப்பியின் ரத்தத்திலேயே இசை ஓடியது.
பாடகர் கிஷோர் குமார் அவரது தாய் மாமா. அவருக்காகவே நிறைய மெல்லிசைப் பாடல்களை இசைத்தவர். பப்பி டா தனது தனித்துவமான குரல், மெல்லிசையால் தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கினார். 1973ஆம் ஆண்டு வெளியான திரைப்படமான நன்ஹா ஷிகாரியில் முகேஷ் பாடிய 'து ஹி மேரா சந்தா'வின் இந்தி இசையமைப்பில் தொடங்கி நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக அவரது இசை வாழ்க்கை நீடித்தது.
1983-1985 வரையிலான காலகட்டத்தில், ஜீதேந்திரா கதாநாயகனாக நடித்த 12 சூப்பர் ஹிட் வெள்ளி விழா படங்களுக்கு இசையமைத்து சாதனை படைத்தார். 1986ஆம் ஆண்டு 33 படங்களுக்காக, 180 பாடல்களுக்கு மேல் பதிவு செய்ததற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார். 2020ஆம் ஆண்டு 'பாகி 3'இல் அவரது கடைசிப் பாடல் இடம் பெற்றது. தங்க நகைகள், கருப்பு கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட அவரது ஆளுமைக்காக பப்பி டா தெளிவாக நினைவுகூரப்பட்டார்.
இவர் இசையமைத்து பாடிய ஹிட் பாடல்களில் இருந்து சிலவற்றை மட்டும் தேர்வு செய்வது சாத்தியமில்லை என்றாலும், இதோ அவரது சிறந்த பாடல்கள் சில:
நான் ஒரு டிஸ்கோ டான்ஸர் (டிஸ்கோ டான்ஸர்): டிஸ்கோ டான்ஸர் படத்தில் பாப்பி லஹிரி இசையில் உருவான இந்த ட்ரெண்ட் செட்டிங் பாடலை விஜய் பெனடிக்ட் பாடினார். இந்த பாடல் 80களில் வந்த தனித்துவமான பாடல்களில் ஒன்றாகும். இவர் இந்திய சினிமாவில் ஒருங்கிணைக்கப்பட்ட டிஸ்கோ இசையின் பயன்பாட்டை பிரபலப்படுத்தினார். ஒரே இசையமைப்பால் இசைத்துறையின் ஆட்டத்தையே மாற்றினார். இந்த பாடல் இன்றளவும் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.
யார் பினா செயின் கஹான் ரே (சாஹேப்): 1985ஆம் ஆண்டு அனில் கபூர் - அம்ரிதா சிங் நடிப்பில் வெளியான திரைப்படம் 'சாஹேப்'. இத்திரைப்பட இசைத்தொகுப்பில் பப்பி டாவின் சந்தேகத்திற்கிடமில்லாத ரத்தினக் கல் இதுவே. இசையமைப்பாளரும், எஸ்.ஜானகியும் இணைந்து பாடிய இந்தப் பாடல் மாபெரும் வெற்றி பெற்றது. காஸ்ட்யூம் முதல் செட் டிசைன், இன்ஸ்ட்ரூமென்டேஷன் வரை, இந்தப் பாடல் 80கால கட்டத்தில் உருவானது தெரியும். பப்பி டா பாடிய பாடல்களில் இதுவும் ஒன்று.
ராத் பாக்கி பாத் பாக்கி (நமக் ஹலால்): 'நமக் ஹலால்' (1982) இலிருந்து, புகழ்பெற்ற ஆஷா போன்சலே குரல் கொடுத்த இந்த ஆவேசமான ஹிட்டுக்கு இசையமைத்தது மட்டுமல்லாமல், இணைந்து பாடினார். இது பர்வீன் பாபி, சஷி கபூர், அமிதாப் பச்சன் ஆகியோர் நடிப்பில் வெளியானது.
பர்வீனின் கறுப்பு நிற பளபளக்கும் உடை, அவரது உணர்ச்சிகரமான அசைவுகள் ஆகியவை பாடலை மற்றொரு நிலைக்கு உயர்த்தியது. படம் பாக்ஸ் ஆபிஸ் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. பப்பி டாவின் இசை மீண்டும் அனைவர் மத்தியிலும் பேசப்பட்டது. இப்படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன.
பியார் மங்கா ஹை தும்ஹிஸ் (காலேஜ் கேர்ள்): பப்பி டா ஒரு டிஸ்கோ-தீம் இசையமைப்பாளர் மட்டுமல்ல, பல்துறை இசையமைப்பாளராகவும் விளங்கினார். கிஷோர் குமார் பாடிய இந்த இதயத்தைத் தொடும் பாடல் 1978ஆம் ஆண்டு வெளியான 'காலேஜ் கேர்ள்' திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தது. கிஷோர் தாவின் குரல் கேட்போரை உருக வைக்கும் ஆற்றல் கொண்டது. இது உண்மையிலேயே பாப்பி டாவின் மிகச்சிறந்த பாடல்களுள் ஒன்றாகும்.